

சூழ்நிலைமைகள் தீர்மானித்தால் உலகக்கோப்பையில் கேப்டன் விராட் கோலியை 4ம் நிலையில் களமிறக்க முடிவெடுப்போம் என்று தலைமைப் பயிற்சியாளர் கூறியதை ‘முட்டாள்தனமானது’ என்று முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்க்கர் சாடியுள்ளார்.
ரவிசாஸ்திரி கருத்துக்கு கோலியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இது நல்ல யோசனைதான் ஏனெனில் தோனி 4ம் நிலையில் இறங்கினால் பெரிய இலக்குகளை விரட்ட முடியாது, ஆகவே விராட் கோலி 4ம் நிலையில் வந்தால் பெரிய இலக்குகளை விரட்ட சவுகரியமாக இருக்கும், தோனி பினிஷர் என்ற பெயர் பெற்றாலும் எளிதாக 48 ஓவர்களில் வெற்றி பெற வேண்டிய இலக்குகளையெல்லாம் கடைசி ஓவர் வரை கொண்டு சென்று படுத்தி எடுப்பார், ஆனால் கோலி பெரிய இலக்குகளை வெற்றிகரமாக விரட்டுவதில் வல்லவர், உண்மையில் பெரிய இலக்குகளை விரட்டுவதில் பினிஷர் என்றால் அது கோலிதான் என்று பலரும் கருத்து கூறிவரும் நிலையில் ரவிசாஸ்திரியின் இந்த யோசனையை அகார்க்கர் சாடியுள்ளார்.
ஆனால் 3ம் நிலையில் விராட் கோலி 8000த்திற்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். 39 சதங்களில் 32 சதங்கள் 3ம் நிலையில் இறங்கிய போது எடுக்கப்பட்டதாகும். ஆனால் 4ம் நிலையிலும் கோலி 1744 ரன்களை 58 ரன்கள் என்ற சராசரி விகிதத்தில் எடுத்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் அகார்க்கர் கூறியிருப்பதாவது:
எண்கள் கூறுவதை சிந்தியுங்கள், 32 சதங்கள் 3ம் நிலையில் இறங்கி எடுத்துள்ளார் விராட் கோலி. 4ம் நிலையிலும் எண்கள் நன்றாகவே உள்ளன, ஆனால் 4ம் நிலையில் கோலி இறங்கக் கூடாது. ஒரு பேட்ஸ்மென் தன் வாழ்நாளின் சாதனைகளையெல்லாம் ஒன்டவுனில் இறங்கி செய்துள்ளார், அவரது மகத்துவமே இந்த டவுனில்தான் வந்துள்ளது.
ஆகவே இவரைப்போய் இன்னும் கீழே இறங்கச் சொல்வது சரியல்ல, 4ம் நிலையிலும் அவர் திறம்பட ஆடலாம், ஆனால் ஏற்கெனவே நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் டவுனிலிருந்து இன்னும் கீழே இறக்குவது முட்டாள்தனமானது.
முதல் 3 வீரர்களின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துள்ளது, மிடில் ஆர்டர்தான் கவலையளிப்பதாக உள்ளது.
இவ்வாறு கூறினார் அஜித் அகார்க்கர்.