Published : 17 Mar 2019 04:26 PM
Last Updated : 17 Mar 2019 04:26 PM

நாங்கள் பிழைக்கக் காரணமான அந்த 30 விநாடிகள்: நியூஸி. மசூதி துப்பாக்கிச் சூடு ‘திக்..திக்’ விநாடிகளை விவரித்த தமிம் இக்பால் 

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டு தீவிரவாதத் தாக்குதலில் வங்கதேச வீரர்கள் நூலிழையில் உயிர்பிழைத்தனர். இதில் மொத்தம் 50 பேர் பலியாகினர்.

 

உலகம் முழுதும் இதற்குக் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் வங்கதேச இடது கை தொடக்க வீரர் தமிம் இக்பால் அந்த திக் திக் விநாடிகள் குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

“பேருந்தில் ஏறி மசூதிக்குச் செல்வதற்கு முன்பாக நடந்த விஷயங்கள்தா எங்கள் உயிரை அன்று காப்பாற்றியது. பொதுவாக முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா மதப்பிரச்சாரத்தைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அதனால்தான் ஜும்மா மசூதிக்கு முன்னதாகவே செல்ல நினைத்தோம்.

 

பேருந்து மதியம் 1.30 மணிக்கு தயாராக இருந்தது. ஆனால் மஹமுதுல்லா செய்தியாளர்கள் கூட்டத்துக்கு சென்று விட்டார். அதை முடித்து ஓய்வறை திரும்பினார். ஓய்வறையில் நாங்கள் கொஞ்சம் கால்பந்து ஆடினோம். தைஜுல், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் ஒத்தைக்கு ஒத்தை ஆடிக்கொண்டிருந்தனர். அதனை அவர்கள் நீட்டித்தனர். இப்படிப்பட்ட சிறுசிறு விஷயங்களே எங்கள் உயிர்களை அன்று காப்பாற்றியது.

 

அதன் பிறகு பேருந்தில் ஏறினோம்.  தொழுகையை முடித்து விட்டு விடுதிக்குச் செல்லத் திட்டம். அதனால்தான் அணி ஆட்ட ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்தனர்.

 

நான் எப்போதும் பேருந்தில் இடது புறம் 6ம் இருக்கையில்தான் அமர்வேன். மசூதியை பேருந்து நெருங்கும் வேளையில் பேருந்தில் வலது புறம் இருந்தவர்கள் அனைவரும் ஜன்னல் வழியே பதற்றத்துடன் பார்க்கத் தொடங்கினர். நான் பார்த்த போது சடலம் ஒன்று தரையில் கிடந்தது. அவர் மயக்கமடைந்தவராக இருக்கலாம் அல்லது குடித்து விட்டு விழுந்து கிடக்கலாம் என்றே நினைத்தோம். பஸ் சென்று கொண்டே இருந்தது மசூதி அருகே நின்றது. ஆனால் எல்லோர் கவனமும் தரையில் விழுந்து கிடந்த உடல் மீது இருந்தது.

 

இது நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு மனிதர் ரத்தத்துடன் அலறிய படி வந்து கீழே விழும் நிலையில் இருந்தார். அப்போது பதற்றம் எங்களைத் தொற்றிக் கொண்டது.  எங்கள் பேருந்து மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே நின்றது. பஸ் டிரைவர் ஒரு பெண்மணியுடன் பேசினார், அந்தப் பெண் நடுங்கிய படி அழுது கொண்டிருந்தார். அவர் ‘அங்கு துப்பாக்கியால் சுடுகிறார்கள் போகாதீர்கள் என்று எச்சரித்தார்.

 

இவர்கள் மசூதிக்குத்தான் வந்துள்ளார்கள் என்றார் டிரைவர், ஆனால் அந்தப் பெண் போகாதீர்கள் அங்குதான் இது நடந்து கொண்டிருக்கிறது’ என்றி மன்றாடினார். அப்போது நாங்கள் பேருந்திலிருந்து இறங்கி மசூதிக்குள் செல்லும் தூரத்தில்தான் இருந்தோம். அப்போதுதான் மசூதியில் பார்த்தோம் பல உடல்கள் ரத்தமயமாக கிடந்தன.  பிணங்களை பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியவில்லை.  நமாஸ் தொப்பி அணிந்திருந்த பலர் பயத்தில் தொப்பியை கழற்றினர். சல்வார் கமீஸ் அணிந்தவர்கள் மேலே ஒரு ஜாக்கெட்டை அணியத் தொடங்கினர். பிறகு பஸ் தரையில் அப்படியே படுத்தோம் 8-9 நிமிடங்கள் அப்படியே இருந்தோம். எங்களுக்கு அப்போது கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஏதோ கலவரம், வன்முறை என்றே நினைத்தோம்.

 

ட்ரைவிரைடம் இங்கிருந்து கிளம்புவோம் என்றோம். ஆனால் அவரோ நகரவில்லை. எல்லோரும் பஸ் டிரைவரை கண்டபடி சத்தம் போட்டோம். அந்த 6-7 நிமிடங்கள் அங்கு போலீஸே இல்லை. அதன் பிறகு சிறப்புப் படையினர் மசூதிக்குள் விரைந்தனர். மேலும் ரத்தக்காயங்களுடன் மசூதியிலிருந்து சிலர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

 

ஒருகட்டத்தில் ‘இங்கிருந்து போய் விடுவோம், நம்மையும் சுட்டு விடுவார்கள்’ என்று கத்தினோம். சிலர் பஸ்ஸில் இருந்தால் ஆபத்து பஸ்சிலிருந்து இறங்கிவிடலாம் என்றனர்.. பஸ்ஸின் இரண்டு கதவுகளும் மூடப்பட்டுள்ளன.

 

அந்தச் சமயத்தில் மேலும் 10 அடி பஸ்ஸை டிரைவர் முன்னால் நகர்த்தினார், அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரியவில்லை. நாங்கள் பதற்றத்தில் பஸ்ஸின் நடுக்கதவை அடித்து உடைக்க முயன்றோம். கதவை போட்டு அடித்தவுடன் டிரைவர் கதவைத் திறந்தார்.  8நிமிடங்கள் பஸ்சில் இருந்து வெளியேற ஆனது. பார்க் வழியாக ஓடிவிடலாம் என்று சிலர் கூறினர், ஆனால் பார்க்கில்தன நாம் இலக்காக எளிதான வாய்ப்பு என்றனர் சிலர்.  அதே வேளையில் நாங்கள் பைகளுடன் ஓடினால் போலீஸ் எங்களைப் பற்றி என்ன நினைக்கும்?

 

மரணத்தை நேரில் பார்த்துவிட்டோம், இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது.

 

நாங்கள் டீம் ஹோட்டலுக்குத் திரும்பி அனைவரும் ரியாத் பாய் ரூமுக்குச் சென்றோம். ஷுட்டிங் வீடியோவைப் பார்த்து நாங்கள் அழுதே விட்டோம். அந்த இரவு நாங்கள் தனியாக உறங்கவில்லை, கண்ணை மூடினாலே அந்தக் காட்சிதான். எங்களுக்கு கவுன்சலிங் தேவை.

 

விமானநிலையத்துக்கு தாய்நாட்டுக்குத் திரும்புவதற்காகப் போய்க்கொண்டிருந்த போது கொஞ்சம் தப்பியிருந்தால் நாம் அனைவரும் இன்று பிணமாகியிருப்போம் என்று பேசிக்கொண்டோம். அந்த 30 விநாடிகள்தான்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x