Last Updated : 15 Mar, 2019 10:41 AM

 

Published : 15 Mar 2019 10:41 AM
Last Updated : 15 Mar 2019 10:41 AM

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு; தொடரை ரத்து செய்தது வங்கதேச அணி: கறுப்பு நாள் என நியூஸி.பிரதமர் கண்டனம்

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் மசூதியில் இன்று நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின்  கிரிக்கெட் பயணத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து  வங்கதேச கிரிக்கெட் அணி தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதைடுத்து, வீரர்களின் பாதுகாப்பு கருதி, நியூஸிலாந்து தொடரை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் தொழுகையில் இருந்த ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது தொழுகைக்கு அங்கு சென்றிருந்த வங்கதேச வீரர்களும் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாளை கிறிஸ்ட் சர்ச் நகரில் நடக்க இருந்த 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நியூஸிலாந்து தொடரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளதாக கிரிக்இன்போ தளம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில், "நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x