

சூப்பர் ஓவரில் மில்லரின் அதிரடி பேட்டிங், இம்ரான் தாஹிரின் திணறிடிக்கும் பந்துவீச்சு ஆகியவற்றால், இலங்கை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது.
சூப்பர் ஓவரில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
ஏற்கெனவே ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.
இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங் செய்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டேல் ஸ்டெயின், லூதம் சிபம்லா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. அதன்பின் நடுவரிசையில் மென்டிஸ், திசாரா பெரேரா, ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் ஓரளவுக்கு நிலைத்து ஆடியதால், 134 ரன்கள் சேர்க்க முடிந்தது.
மென்டிஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். திசாரா பெரேரா 19, ஏஞ்சலோ பெரேரா 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் பெகுல்க்வாயோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் டீகாக்(13) ஹென்ரிக்ஸ்(8) விரைவாக ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த டூப்பிளசிஸ் (21), வேன்டர் டூசன் (34) ஓரளவுக்கு ஆடியபோதிலும், நிலைக்கவில்லை. 16-வது ஓவரின் 3 பந்தில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்கள் சேர்த்திருந்த போது 4-வது விக்கெட்டை இழந்தது.
அதன்பின் 3 ஓவர்கள், 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையிலும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பதற்றத்துடன் ஆடியதால், ஆட்டம் நெருக்கடியில் முடிந்தது.
நிதானமாக பேட் செய்துவந்த மில்லர் 41 ரன்களில் ரன் அவுட்டில் 16-வது ஓவரின் 5-வது பந்தில் வெளியேறினார். அடுத்துவந்த பெகுல்க்வாயோ (4), ரபாடா டக்அவுட், டுமினி(9) என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. டுமினி, ஸ்டெயின் களத்தில் இருந்தனர். உதானா பந்துவீசினார். டுமினி ஒரு ரன் அடித்துவிட்டு, ஸ்டெயினுக்கு வாய்ப்பு அளித்தார். ஸ்டெயின் இரு பந்துகளை வீணாக்கிவிட்டு ஒரு ரன் ஓடினார். அணியின் ஸ்கோர், 132 ரன்கள் இருந்தது.
2 பந்துகளில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. 5-வது பந்தில் டுமினி 9 ரன்களில் ரன் அவுட் ஆகினார். கடைசிப் பந்தில் இம்ரான் தாஹிர் ஒரு ரன் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது.
இரு அணிகளும் 134 ரன்கள் சேர்த்திருந்ததால், ஆட்டம் டையில் முடிந்து முடிவை அறிய சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சூப்பர் ஓவரில் ஒரு ஓவர் மட்டுமே வீசப்படும். தென் ஆப்பிரிக்க தரப்பில் மில்லர், வேன்டர் டூசன் களமிறங்கினார்கள். இலங்கை தரப்பில் மலிங்கா பந்துவீசினார்.
மில்லர் அதிரடி
முதல் பந்தில் மில்லர் ஒரு ரன்னும், 2-வது பந்தில் வேண்டர் டூசைன் ஒரு ரன்னும் எடுத்தனர். 3-வது பந்திலும் சிக்ஸரும் 5-வது பந்திலும் பவுண்டரியும் மில்லர் விளாசினார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் 14 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, இலங்கை வெற்றி பெற ஒரு ஓவரில் 15 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இம்ரான் தாஹிர் அபாரம்
இலங்கை தரப்பில் திசாரா பெரேரா, பெர்னான்டோ களமிறங்கினார்கள். இம்ரான் தாஹிர் பந்துவீசினார். முதல் பந்தில் வந்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டீ காக் நழுவவிட்டார். 3-வது பந்தில் ஸ்டெயின் ஒரு கேட்சை நழுவவிட்டார். இம்ரான் தாஹிரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் இலங்கை அணி 4 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியைத் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.