Published : 15 Mar 2019 08:19 PM
Last Updated : 15 Mar 2019 08:19 PM

4-ம் நிலையில் பேட் செய்ய தோனியும் இல்லை.. ராயுடுவும் இல்லை: கங்குலியின் அதிர்ச்சி  ‘சாய்ஸ்’

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைல் ‘உதை’ வாங்கிய பிறகே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இந்திய அணி நிர்வாகம் பேசி வருகிறது.  ஏதோ இந்த இந்திய அணியில் டவுன் ஆர்டர் மட்டும்தான், பிரச்சினை என்பது போல் பேசப்பட்டு அணியின் உண்மையான பலவீனம் மறைக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது.

 

தோனி வந்தால் சரியாகிவிடும், பாண்டியா வந்தால் சரியாகி விடும் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  உலகக்கோப்பை அணியில் 4ம் நிலையில் இறங்கப்போவது யார்? அதுதான் இப்போதைய பேசுபொருள். 2017 சாம்பியன்ஸ் ட்ராபிக்குப் பிறகே 4ம் நிலைக்கு இதுவரை 11 வீரர்களை முயன்றிருக்கிறார்கள்.

 

4ம் நிலையில் விராட் கோலியையே இறக்கி விடலாம் என்றும் ரிஷப் பந்த்தை  இறக்கலாம் என்றும் விஜய் சங்கரை இறக்கலாம் என்று பல்வேறுவிதமாக யோசித்து வருகின்றனர். மொஹாலியில் கோலி 4ம் நிலையில் இறங்கி 7 ரன்களில் வெளியேறினார்.

 

அம்பதி ராயுடுதான் அந்த நிலைக்குச் சரியானவர் என்று விராட் கோலி கூறினார், ஆனால் அவர் நல்ல தரமான அணிக்கு எதிராக, பந்து வீச்சுக்கு எதிராக சரியாக ஆட முடியவில்லை, ஆட்டமிழந்து வருகிறார். அதனால் அவரையும் தூக்கியாகி விட்டது, தோனியை அங்கு வைத்தால் பெரிய இலக்குகளை விரட்டும்போது ஒரு கட்டத்தில் ஓவருக்கு 15-17 ரன்கள் தேவை என்ற ஆபத்தில் போய் முடியலாம்.

 

இந்நிலையில் கங்குலி கூறும் 4ம் நிலை வீரர் யார் தெரியுமா?

 

“நான் கூறப்போவது பல ரசிகர்களுக்கும் நம்ப முடியாததாக இருக்கும். மேலும் பலரும் நான் கூறும் வீரரின் பெயரைப் பார்த்து என்னை நோக்கி சிரிக்கவும் செய்வார்கள். ஆனால் யார் என்ன கூறினாலும் என்னைப் பொறுத்தவரையில் புஜாராதான் என் 4ம் நிலை வீரர். ஒருநாள் போட்டிகளில் புஜாரா என் 4ம் நிலை வீரர். அவரது பீல்டிங் கொஞ்சம் பலவீனம்தான் இல்லை என்று கூறவில்லை.

 

பலரும் நான் புஜாரா என்றவுடன் அதிர்ச்சியடைவார்கள், ஆனால் அவர் நல்ல பேட்ஸ்மென்.  இதுவரை முயற்சி செய்தவர்களை விட புஜாரா ஒரு நல்ல பேட்ஸ்மென் தான். புஜாரா 4ம் நிலைக்குச் சிறந்த தெரிவே.

 

அதாவது ஒருநாள் போட்டிகளில் ராகுல் திராவிட் ஆற்றிய ரோலை புஜாரா செய்ய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து நிறைய பேர் என்னுடன் இதில் உடன்பட மாட்டார்கள்.  ஒருநாள் கிரிக்கெட்டிலும் சில வேளைகளில் ஸ்திரம் தேவை அதற்கு புஜாரா உதவுவார்.” என்றார் கங்குலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x