டாஸ் வென்றது ஆஸி.: பும்ரா வேகத்தில் முதல் விக்கெட்டை இழந்தது

டாஸ் வென்றது ஆஸி.: பும்ரா வேகத்தில் முதல் விக்கெட்டை இழந்தது
Updated on
1 min read

ஹைதராபாத்தில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்துள்ளது.

ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் பும்ராவின் முதல் ஓவரில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்து வெளியேறினார். பும்ரா வீசிய 3-வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பிஞ்ச் டக்அவுட்டில் வெளியேறினார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்று விளையாடுகிறது.

முதலாவது ஒருநாள் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக இரு அணிகளும் பங்கேற்கும் சர்வதேச ஆட்டம் என்பதால் மிக முக்கியமானதாகும்.

உலகக்கோப்பை போட்டிக்கான அணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால், இன்னும் 2 அல்லது 3 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது. இந்தத் தொடரில் அந்த 3 வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு உலகக்கோப்பை வாய்ப்பு அடைக்கப்பட்டுவிட்டது. இந்த ஒருநாள் தொடருக்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

அதேசமயம், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டர்னல் அறிமுகமாகிறார்.

இந்திய அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், இரு சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற ரீதியில் களமிறங்குகிறது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் இடத்துக்கு விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 போட்டியில் இடம் பெற்றிருந்த யஜூவேந்திர சாஹல் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ரவிந்திர ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் தோனிக்கு நேற்று பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. அது குணமாகிவிட்டதால், அவர் இன்று போட்டியில் விளையாடுகிறார்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in