Last Updated : 23 Mar, 2019 09:54 PM

 

Published : 23 Mar 2019 09:54 PM
Last Updated : 23 Mar 2019 09:54 PM

வரலாறு திரும்பியது: 11 ஆண்டுகளுக்குப் பின் 100 ரன்களுக்குள் சுருண்ட ஆர்சிபி அணி.

2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது, 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்ததைப் போன்று 2019-ம் ஆண்டில் 12-வது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆட்டமிழந்துள்ளது.

12-வது ஐபிஎல் போட்டி இன்று கோலாகலமாக சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதியது.

டாஸ்வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணி ஆட்டத்தைத் தொடங்கியது.  சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவே எப்போதும் இல்லாத வகையில் ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜாவின் பந்துகள் எல்லாம் நன்றாகச் சுழன்றன. தொடக்கத்தில் இருந்த சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

100 ரன்களுக்குள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டத்தில் சுருண்டது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட ஆண்டில் இதுபோன்றுதான் பெங்களூரு அணி  முதல் ஆட்டத்தில் 100 ரன்களுக்கு சுருண்டு படுமோசமான தோல்வி அடைந்தது.

2008-ம் ஆண்டு, ஏப்ரல் 18-ம் தேதி முதலாவது ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நடந்தது. கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

அந்த போட்டியில்தான் நியூஸிலாந்து வீரர் பிரண்டம் மெக்குலம் ருத்ரதாண்டவம் ஆடிய பெங்களூரு அணியை பொறித்து எடுத்தார். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களின் பந்தை விரட்டி,விரட்டி மெக்கலம் அடித்தார். பிரவீண்குமார், காலிஸ், ஜாகீர்கான் பந்துகள் சிக்ஸர்,பவுண்டரிக்கு பறந்தன. ஐபிஎல் போட்டி குறித்து அறியாமல் வந்த ரசிகர்களுக்கு மெக்கலம் வானவேடிக்கை நிகழ்த்தி போட்டியை உற்சாகப்படுத்தினார்.

 மெக்கலம் 32 பந்துகளில் அரைசதத்தையும், 53 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் மெக்கலம் இருந்தார். அதில் 13 சிக்ஸர்கள், 10 பவுண்டரி அடங்கும். 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது.

223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 82 ரன்களுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களில் தோல்விஅடைந்தது. அந்த போட்டியில் ஆர்சிபி அணியின் 10 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அந்த போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அகர்கர் 3 விக்கெட்டுகளையும், கங்குலி, டின்டா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் முதல் ஆட்டத்தில் 100 ரன்களுக்குள் சுருண்டதும் அப்போது ஆர்சிபி அணிதான், 11 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடந்த ஆட்டத்திலும் 100 ரன்களுக்குள் முதல் ஆட்டத்திலேய சுருண்டதும் ஆர்சிபி அணிதான்…..

சூப்பர்பா… நல்லா வருவீங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x