Published : 14 Mar 2019 10:42 AM
Last Updated : 14 Mar 2019 10:42 AM

பூர்த்தியடையாத கனவுகளுடன் முடிந்த கிரிக்கெட் வாழ்க்கை : வேகப்பந்து வீச்சாளர் வி.ஆர்.வி.சிங் ஓய்வு பெற்ற பரிதாபம்

2006-07 காலக்கட்டங்களில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் வி.ஆர்.வி.சிங் தன் 34 வயதில் பூர்த்தியடையாத தன் கிரிக்கெட் கனவுகளுடன் முழு ஓய்வு அறிவித்துள்ளார்.

 

2006-07-ல் 5 டெஸ்ட் போட்டிகள் 2 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டும் ஆடிய இந்த நிறைய நம்பிக்கைகளை அளித்த வி.ஆர்.வி.சிங் கடைசியில் பூர்த்தியடையாத கிரிக்கெட் கனவுகளுடன் ஓய்வு அறிவித்து விட்டார்.

 

இது மிகப்பெரிய ஒரு தனிநபர் துயரம்தான். சிறு வயது முதல் கிரிக்கெட் கிரிக்கெட் என்று அனைத்தையும் துறந்து இதில் கவனத்தைச் செலுத்தி  ‘உண்ணும் போதும் உறங்கும் போதும் எண்ணம் முழுதும் கிரிக்கெட் தானே’ என்று வாழ்ந்து வரும் வீரர்கள் காயத்தினால் மீள முடியாமல் பெரிய அளவில் தான் சார்ந்த கிரிக்கெட் வாரியமும் உதவாமல் இப்படி நிறைவேறாத கனவுகளாக பாதியில் முடிவது ஒரு பெரிய தனிப்பட்ட துயரமே. அதுதான் வி.ஆர்.வி. சிங்குக்கு நடந்தது.

 

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் கிரேம் ஸ்மித் தலைமை தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய அணி அதிர்ச்சி மருத்துவம் அளித்து வெற்றி பெற்ற போட்டியில் 29 ரன்களை வி.ஆர்.வி. சிங் கடைசியில் இறங்கி அடித்தது வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்தது, அந்த டெஸ்ட் வெற்றி தென் ஆப்பிரிக்க அணியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சோகமாக்கியது.

“இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியில் (ஜொஹான்னஸ்பர்க்) நான் இந்திய அணியில் இருந்தேன்.  அந்த 29 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் நல்ல இன்னிங்ஸ். அது அணிக்கு உதவியது. பங்களித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். 2008-ல் பெர்த்தில் இந்திய அணி வென்ற போது நான் இந்திய ஸ்குவாடில் இருந்தேன். வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் தொடரில் ஆடினேன். 2006-ல் அங்கு வென்றோம்.  இவையெல்லாம் விலைமதிப்பில்லா கணங்கள். அந்தக் கணங்களில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி” என்று வெற்றிகளின் நினைவுகளை தன் சோகமான கரியரிலும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டுள்ளார்.

 

ரஞ்சி டிராபியில் கடைசியாக பஞ்சாபிற்காக 2014-ல் ஆடினார். ஜம்மு காஷ்மீருக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் தர கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

“நான் திரும்பவும் வந்து ஆடலாம் என்று தான் நினைத்தேன். என் கணுக்கால் அல்ல பிரச்சினை, என் முதுகு. அறுவை சிகிச்சைகள், மறுபுனரணமைப்பு பயிற்சிகள். நம் உடலை நாம் சாதாரணமாக எண்ண முடியாது.  சில பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆட முடியாமலேயே போய் விட்டது. விஆர்வி என்று அழைக்கப்படும் இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காக ஆடினார்.

 

“யுவராஜ் சிங் என்னை நிரம்பவும் ஊக்குவித்தார். பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என்னை ஆதரித்தது. நானும் முயற்சி செய்தேன் ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதுவும் தகையவில்லை. ஆகவே ஓய்வு பெற்றுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்க முடிவெடுத்தேன்” என்கிறார் வி.ஆர்.வி.சிங்.

 

நல்ல உயரத்துடன் உடற்கட்டமைப்புடன் கூரிய விஆர்வி சிங் இந்தியாவின் ஆக்ரோஷ யு-19 அணியின் விளைபொருளாவார். 2005-ல் 21 வயதில் பஞ்சாபுக்காக அறிமுகமானார். உண்மையான வேகம் வீசக்கூடியவர். காயம் அவரது கனவுகளை பாழடித்துள்ளது. சில திறமைகளின் கிரிக்கெட் வாழ்வு இம்மாதிரி வருவதற்கு முன்னரே முடிவது ஒரு தனிப்பட்ட பெரும் துயரம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x