

தமிழர்களின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கிவிட்டேன் என்று சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்பஜன் சிங் 4 ஓவர்கள் வீசி, 13 டாட்பந்துகள் உள்பட 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த மகிழ்ச்சியில் நேற்று ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங், தான் சென்னை அணிக்கு வந்ததில் இருந்து தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபாவளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜா புயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்து தனது வாழ்த்துகளையும், ஆதங்கம், வருத்தங்களையும் தெரிவித்து வந்தார்.
சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து மகிழ்வித்தார்.
அந்தவகையில் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறுகையில், " என் ஜெர்சி நம்பர் 27. இன்றைய சென்னை ஐபிஎல் ஸ்பெல் 4-0-20-3=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் 27. இவையாவும் தற்செயல். ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று!" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது.