பிராட்மேன் கவுரவிப்பு விருதுப் பட்டியலில் சச்சின்

பிராட்மேன் கவுரவிப்பு விருதுப் பட்டியலில் சச்சின்
Updated on
1 min read

அக்டோபர் 29ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் பெரிய இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் அறக்கட்டளையினால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் கவுரவிப்புக்குரியவர்கள் பட்டியலில் இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் வாஹ் பெயர்கள் இடம்பெற்றுள்ளன,

சிட்னி கிரிக்கெட் மைதானத்தை தனக்குப் பிடித்தமான மைதானங்களில் ஒன்றாகக் கருதும் சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் டான் பிராட்மேன் கவுரவிப்பு விருதைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

முதன் முதலில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தைப் பார்த்து டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் தன்னைப்போல ஆடுவதாகக் கூறியது உலகப் பிரசித்தி பெற்றது. டான் பிராட்மேனின் இந்தக் கூற்றினால் ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கர் மீதான மரியாதை அபரிமிதமாக அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் சச்சின் டெண்டுல்கர் 5 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை எடுத்துள்ளார். குறிப்பாக 2003-04 டெஸ்ட் தொடரில் அவர் எடுத்த 241 நாட் அவுட், இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட சிறந்த சதங்களில் ஒன்று என்று ஆஸ்திரேலிய நிபுணர்களாலேயே பாராட்டப்பட்ட இன்னிங்ஸ் ஆகும்.

இந்தத் தொடரில் அதற்கு முன்பு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடி அவுட் ஆகி வந்த சச்சின் டெண்டுல்கர், இந்த சிட்னி டெஸ்டில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை தொடாமலேயே இன்னிங்ஸ் முழுதும் ஆடியது குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் சராசரி 157 என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த கவுரவிப்பிற்கு சச்சின், ஸ்டீவ் வாஹ் போன்று பொருத்தமுடையவர்கள் வேறு இலர்” என்று பிராட்மேன் அறக்கட்டளையின் தலைமை செயல் இயக்குனர் ரினா ஹோர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in