Published : 21 Mar 2019 08:11 AM
Last Updated : 21 Mar 2019 08:11 AM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த சீசனில் அவரை அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பவர் பிளேவில் அதிரடியாக ரன்கள் குவிப்பதே அணியின் பிரதான பலமாக உள்ளது. கடந்த சீசனில் தகுதி சுற்று 2 வரை முன்னேறியிருந்தது. இம்முறை மீண்டும் வலுவாக களமிறங்குகிறது.

மொத்த வீரர்கள் 21

இந்திய வீரர்கள் 13

வெளிநாட்டு வீரர்கள் 8

அணிச் சேர்க்கை

தொடக்க வீரர்கள்: கிறிஸ் லின், ராபின் உத்தப்பா.

நடுவரிசை வீரர்கள்: சுப்மான் கில், நித்திஷ் ராணா, ரிங்கு சிங்.

விக்கெட் கீப்பர்கள்: தினேஷ் கார்த்திக், நிகில் நாயக்.

ஆல்ரவுண்டர்கள்: ஆந்த்ரே ரஸ்ஸல், ஜோ டென்லி, ஸ்ரீகாந்த் முன்டே, கார்லோஸ் பிராத்வெயிட்.

ரிஸ்ட் ஸ்பின்னர்கள்: பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், கே.சி.கரியப்பா.

விரல் ஸ்பின்னர்: சுனில் நரேன்

வேகப்பந்து வீச்சாளர்கள்: சந்தீப் வாரியர், பிரஷித் கிருஷ்ணா, பிரித்வி ராஜ், ஹாரி குர்னே, அன்ரிச் நார்ட்ஜி, லூக்கி பெர்குசன்.

பலம்

டாப் ஆர்டரில் கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா ஆகியோர் பவர் பிளேவில் மற்ற அணி வீரர்களைவிட அபாயகரமான பேட்ஸ்

மேன்களாக திகழ்கின்றனர். கடந்த சீசனில் பவர் பிளேவில் கொல்கத்தா அணியின் ஸ்டிரைக் ரேட் 44.3 ஆகும்.

அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வீரர்கள் அனைவருமே உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே அவர்கள் சீசன் முழுவதும் விளையாடக்கூடியவர்கள் என்பதால் அணியின் திறன் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

கடந்த சீசனில் மற்ற அணிகளைவிட கொல்கத்தா அணி அதிக அளவில் சுழற்பந்து வீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்தியிருந்தது. இந்த வகையில் 167.3 ஓவர்கள் வீசி 48 விக்கெட்களை வீழ்த்தியிருந்தது. இம்முறையும் குல்தீப் யாதவ், சுனில் நரேன், பியூஸ் சாவ்லா சுழல் கூட்டணி மிரட்ட ஆயத்தமாக உள்ளது.

பலவீனம்

பந்து வீச்சின் போது பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். கடந்த சீசனில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர். இம்முறை ஹாரி குர்னே, லூக்கி பெர்குசன் இறுதிக்கட்ட ஓவர்களில் பலம் சேர்க்கக்கூடும்.

இந்திய வீரர்களில் ஆல்ரவுண்டர்கள் பங்களிப்பை வழங்க சிறந்த வீரர்கள் இல்லை. வெளிநாட்டு வீரர்களில் கார்லோஸ் பிராத்வெயிட், ஆந்த்ரே ரஸ்ஸல், ஜோ டென்லி, சுனில் நரேன் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் பேட்டிங்கில் கிறிஸ் லின் சிறந்த தொடக்கம் கொடுக்கக்கூடியவர். இந்த 4 பேரில் 3 வீரர்கள் நிச்சயம் விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும் என்பதால் பந்து வீச்சில் பெர்குசன், ஹாரி குர்னே, அன்ரிச் நார்ட்ஜி ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

மாற்றங்கள்

கடந்த சீசனில் விளையாடிய அதிரடி பேட்ஸ்மேன்களான ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரேன், கிறிஸ் லின் மற்றும் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், வளர்ந்து வரும் வீரரான சுப்மான் கில் உள்ளிட்ட 13 வீரர்களை கொல்கத்தா அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிராத்வெயிட்டை ரூ.5 கோடிக்கும், இங்கிலாந்தின் ஜோ டென்லி, ஹாரி குர்னே, நியூஸிலாந்தின் லூக்கி பெர்குசன் ஆகியோரை கணிசமான தொகைக்கும் வளைத்து போட்டுள்ளது கொல்கத்தா அணி. அதேவேளையில் இங்கிலாந்தின் டாம் கரன், ஆஸ்திரேலியாவி ன் மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோரை விடுவித்தது.

இதுவரை

2008 லீக் சுற்று

2009 லீக் சுற்று

2010 லீக் சுற்று

2011 4-வது இடம்

2012 சாம்பியன்

2013 லீக் சுற்று

2014 சாம்பியன்

2015  லீக் சுற்று

2016  4-வது இடம்

2017 3-வது இடம்

2018 3-வது இடம்

நட்சத்திர வீரர்கள்

குல்தீப் யாதவ்: கடந்த சீசனை விட இம்முறை குல்தீப் யாதவ் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தக்கூடும். இவருக்கு பலம் சேர்க்கும் விதமாக சுனில் நரேன், பியூஸ் சாவ்லா ஆகியோரும் அணியில் உள்ளனர்.

விக்கெட்கள் 35

ஸ்டிரைக் ரேட் 17.88

தினேஷ் கார்த்திக்:  கவுதம் காம்பீர் கடந்த சீசனில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் கேப்டனாக பொறுப்புடன் செயல்பட்டு அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் தினேஷ் கார்த்திக். பேட்டிங்கிலும் கடந்த சீசனில் சிறந்த பங்களிப்பு செய்திருந்த தினேஷ் கார்த்திக், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் விதமாக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

ரன்கள் 3,401

சராசரி 26.77

துருப்பு சீட்டு

சுனில் நரேன்: தொழில்முறை டி 20 போட்டிகளில் கடந்த சில சீசன்களில் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் சுனில் நரேன். தனது மாய சுழலால் நடு ஓவர்களில் எதிரணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தக்கூடியவர். ஓவருக்கு சராசரியாக 6.60 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்கக்கூடிய அரிதான சுழற்பந்து வீச்சாளர்.

ரன்கள் 628 ஸ்டிரைக் ரேட் 168.81

விக்கெட்கள் 112 ஸ்டிரைக் ரேட் 20.46

ஆந்த்ரே ரஸ்ஸல்: இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்க்கும் திறன் கொண்டவர் ஆந்த்ரே ரஸ்ஸல். ஆல்ரவுண்டரான இவர், மித வேகப் பந்து வீச்சிலும் அணிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்.

ரன்கள் 890

சராசரி 26.96

லூக்கி பெர்குசன்: நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வளர்ந்து வரும் லூக்கி பெர்குசன், இந்த சீசனில்நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக வலம் வரக்கூடும். ஈடன் கார்டன் மைதானம் மின்னொளியில் வேகப் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் பெர்குசன் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

விக்கெட்கள் 3

சராசரி 26.4

சுப்மான் கில்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் நட்சத்திர வீரராக விளங்கிய சுப்மான் கில், ஒரே ஆண்டில் அனைவராலும் பாராட்டத்தகுந்த வகையிலான வீரராக உருவெடுத்தார். ஆனால் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தத் தவறினார். கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில ஆட்டங்களில் தனது அதிரடியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சுப்மான் கில் மீண்டும் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கக்கூடும்.

ரன்கள் 203

சராசரி 33.83

கிறிஸ் லின்:  தனது அதிரடி பேட்டிங்கால் தொழில் முறை டி 20 போட்டிகளில் பிரபலமானவர் கிறிஸ் லின். எனினும் பிக்பாஷ் டி 20 தொடரில் இந்த சீசனில் அவரிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டங்கள் வெளிப்படவில்லை. இதனால் மீண்டும் மட்டையை சுழற்ற தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

ரன்கள் 875

சராசரி 35.00

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x