Published : 26 Mar 2019 06:24 PM
Last Updated : 26 Mar 2019 06:24 PM

‘நிச்சயமாக ஒரு போட்டியை இப்படி வெல்வது கூடாது ‘: அஸ்வின் - பட்லர் விவகாரத்தில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள் கருத்து

ஐபிஎல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்த விவகாரம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இன்னமும் முடிந்தபாடில்லை.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அஸ்வினின் செயலைக் கண்டித்துள்ளனர்.

 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் கூறும்போது,  “ஒரு பேட்ஸ்மேனை இப்படியாக அவுட் செய்வது கூடாது. அதுவும் இந்த தருணத்தில் ஜோஸ் பட்லர் அஸ்வின் பந்து வீச்சு ஆக்‌ஷன் முக்கால்வாசி வந்த நிலையில் கிரீஸில்தான் இருந்தார். அவர் பவுலருடன் ஓடவில்லை. அவர் ரன்னும் ஓடவில்லை. உள்ளபடியே கூற வேண்டுமெனில் அவர் நிலையாகவே இருந்தார்.

 

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இது ஆட்டத்தில் சேர்த்தி இல்லை.  பேட்ஸ்மென்கள் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் போது நடுவர் தலையிட்டு இதனைச் சரி செய்வதுதான் முறை” என்றார்.

 

கமின்ஸ் கூறும்போது, “இது எனக்கு சரியானதாகப் படவில்லை.  பேட்ஸ்மேன் இப்படியாக ஒரு ரன் எடுக்க முயன்றால் அஸ்வின் செய்ததை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அங்கு ஜோஸ் பட்லர் தகாத வகையில் எதுவும் செய்யவில்லை. அது உண்மையில் பார்ப்பதற்கு அசிங்ககமாகவே இருந்தது.

 

ஆம் விதி உள்ளது, ஆனால் இங்கு விதிமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு போட்டியை வெல்ல நான் விரும்ப மாட்டேன்” என்று அதிருப்தி தெரிவித்தார்.

 

ஆனால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட், “ஆட்ட உணர்வு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். கருத்துகள் மாறுபடுவது போலவே. மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள் வீடுதிரும்பும் வரை இதையேதான் நாம் பேசிக்கொண்டிருப்போம். ஆகவே கிரிக்கெட் விதிமுறைகளைக் கடைபிடியுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x