

மயங்க் அகர்வாலின் காட்டடி அரைசதத்தால், கர்நாடக அணி முதல் முறையாக முஷ்டாக் அலி டி20 கோப்பையை அபாரமாக கைப்பற்றியது.
இந்தூரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கர்நாடக அணி.
முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கர்நாடக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
2014-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை புரட்டி எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் பட்டம் வெல்ல மணீஷ் பாண்டே 55 பந்துகளில் அடித்த 94 ரன்கள் அடித்தது முக்கியக் காரணமாகும். மணிஷ் பாண்டே தலைமையில் இப்போது கர்நாடக அணி முதல் முறையாக முஷ்டாக் அலிபோட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கர்நாடக அணியில் முக்கிய வீரர்கள் கே.எல்.ராகுல், சம்ரத் ஆகியோர் இல்லாத சூழலில் கர்நாடக அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற கர்நாடக அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. மகாராஷ்டிரா அணியில் ஷேக் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்களான பாவ்னே 29, கெய்க்வாட் 12, திரிபாதி 30 ரன்கள் சேர்த்தனர். கர்நாடகத் தரப்பில் மிதுன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சரத்(2) விரைவாக ஆட்டமிழக்க, கடாம், மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர்.
மயங்க் அகார்வாலும், ரோஹன் கதம் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டனர். ரோஹன் 39 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 90 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
காட்டடி அடித்த மயங்க் அகர்வால் 57 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.
இதில் கர்நாடக வீரர் ரோஹன் கதம் இந்த தொடரில் 12 இன்னிங்களில் விளையாடி 536 ரன்கள் குவித்துள்ளார். ஒரு சதம், 5 அரைசதம் அடித்து, ஸ்ட்ரைக் ரேட் 129.78 என ரோஹன் வைத்துள்ளார்.