

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் டஸ்சன் லாஜோவிக்குக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 6-3, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் செர்பியா முன்னிலை பெற்றுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே–ஆப் சுற்றில் இந்தியா–செர்பியா அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
நேற்று முதல் ஆட்டத்தில் லாஜோவிக்கை பாப்ம்ரி எதிர்கொண்டார். இதில் கடுமையாக போராடியபோதிலும் பாம்ப்ரியால் லாஜோவிக்கை வெல்ல முடியவில்லை. இன்று நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஜோடி செர்பியாவின் நினாத் ஜிமோன்ஜிக், போசோஜாக் எதிர்கொள்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டஸ்சன் லாஜோவிக்கை சோம்தேவ் தேவ்வர்மன் எதிர்கொள்ள இருக்கிறார். யூகி பாம்ப்ரி, மற்றொரு செர்பிய வீரர் கராஜினோவிக் எதிர்த்து விளையாட இருக்கிறார்.