Published : 14 Mar 2019 01:24 PM
Last Updated : 14 Mar 2019 01:24 PM

தோல்வியினால் ஓய்வறையில் எந்த பதற்றமும் இல்லை, பயிற்சியாளர்கள் உணர்வு தொய்வடைந்து விடவில்லை: நன்னிலை உணர்வில் விராட் கோலி

எது நடந்தாலும் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறுவதும், எல்லாமே நல்லதுதான் என்பதும், நல்லதுக்குத்தான் என்று பேசுவதற்கும் உணர்வதற்கும்  ஒரு வார்த்தை உண்டு அதுதான் Stoic என்ற பதம் உணர்த்துவது.  பழந்தமிழ் இலக்கியங்களில் அறநூல்களில் சான்றாண்மை, நவீன தமிழில் நடுநிலை உணர்வு இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாடு என்று இதற்குப் பெயர். அதாவது எதுகுறித்தும் விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலை.

 

விராட் கோலி மைதானத்தில் இந்த விருப்பு வெறுப்பற்ற நிலையில், ஒரு தத்துவார்த்த பற்றற்ற நிலையில் கிரிக்கெட்டை ஆடுபவர் அல்ல, பல தருணங்களில் நாம் அவரைப் பார்த்திருக்கிறோம், நேற்று கூட கவாஜா ஆட்டமிழந்த பிறகு அவர் காட்டிய வெறுப்பு உடல் மொழி படுமோசமாக இருந்தது.

 

அதாவது கோலியின் மனநிலையைப் பகுப்பாய்வு செய்தால், வெற்றி பெறும் போது ஒரு Euphoria, அதாவது அளவுக்கதிகமான உணர்ச்சி வெளிப்பாடு, மகிழ்ச்சி வெளிப்பாடு, அந்த கனவு நிலையில் தத்தளிப்பது, ஊர்வது... அணியின் பலவீனங்கள் அம்பலமாகி தோல்வியுறும்போதும், தன் கேப்டன்சி தவறுகள், அணித்தேர்வு கோளாறுகள் பட்டவர்த்தனமாகும் போதும் ஒரு போலி ஸ்டாய்க் மனநிலைக்கும் விறுப்பு வெறுப்பற்ற ஒரு போலி நடுநிலை மனநிலைக்கும் கோலி சென்று விட முடிகிற்து. இதற்கும் அதற்கும் அவரால் சுலபமாகத் தாவ முடிவது அவரது பன்முகத்தன்மை அல்ல பிளவுண்ட ஆளுமை என்பதாலேயே. இந்த விஷயங்களில் தோனிக்கு இருக்கும் ஒரு ஓர்மை கோலியிடத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

 

தோல்விக்குப் பிறகு கோலி தோல்வியைக் கையாளும் விதம் இத்தகைய பிளவுண்ட மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது,

 

அவர் கூறும்போது, “ஓய்வறையில் இருக்கும் நாங்கள் எந்தவிதப் பதற்றமும் அடையவில்லை. தோல்விக்குப் பிறகு பயிற்சியாளர்கள் யாரும் உணர்வு ரீதியாக தொய்வடைந்து விடவில்லை. ஏனெனில் கடந்த 3 போட்டிகளில் எங்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தோம். இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக்கோப்பைதான் என்பது தெரிந்தே ஆடினோம். ஒரு அணியாக நாங்கள் சமச்சீராக, சமநிலையுடனேயே உணர்கிறோம். நெருக்கடி தருணங்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியதே தவிர நமக்கு பதற்றம் எல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

 

அதாவது போலி நடுநிலைத்தன்மையின் ஒரு வெளிப்பாடு இது, அதாவது அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம் என்னைப் பாதிக்கவில்லை, என்னைச் சார்ந்தவர்களைப் பாதிக்கவில்லை என்று கூறுவது. அணியில் உள்ள மற்றவர்கள் தோல்வியினால் பதற்றமடையவில்லை என்பது இவருக்கு எப்படி தெரியும்?

 

மேலும் அவர் கூறுவது, “ஓர் அணியாக, அணிச் சேர்க்கையில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாங்கள் சரியாக பணிகளை ஒதுக்கி விட்டோம். அதிகபடி போனால் ஒரு மாற்றம் மட்டும் ஏற்படலாம், சூழ்நிலை அடிப்படையில் அது இருக்கும். மற்றபடி எந்த 11 பேர் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம்.

 

கடைசி 3 போட்டியில் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தை சோதிக்க வாய்ப்புகள் வழங்கினோம். இன்னின்ன சூழ்நிலைகளில் இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்க்கவே தேர்வு செய்தோம்.  இந்த 3 போட்டிகளை விட்டால் நாம் சோதிக்க வாய்ப்பில்லை. இது ஏதோ நான் தோல்விக்கான சாக்காகக் கூறவில்லை, எந்த அணியாக இருந்தாலும் கிரிக்கெட் தரநிலையை உயர்த்துவது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். விளையாடும் 11-ல் மாற்றம் என்பது சாக்குப்போக்கு அல்ல.

 

நெருக்கடி தருணங்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியதே அவர்கள் வெற்றிக்குக் காரணம்” என்றார் விராட் கோலி.

 

உண்மையான பிரச்சினைகளை மறைத்து அணிச்சேர்க்கை அணிச்சேர்க்கை என்று கூறி தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்தே எந்த ஒரு வீரரையும் செட்டில் ஆக விடாமல் செய்து விட்டதை ஏதோ அணியின் பேலன்ஸ் என்பது போல் அவரால் பேச முடிகிறது, செய்தியாளர்களும் கேள்விகளை கூர்மையாக்குவதில்லை. அவர் கூறுவதை அப்படியே செய்தியாக்கி வருகின்றனர். ஏன் இந்தத் தொடருக்கு தினேஷ் கார்த்திக்கை அனாவசியமாக உட்கார வைத்தீர்கள் என்று ஒருவரும் அவரிடம் கேட்கவில்லை. அப்படியென்றால் உலகக்கோப்பைக்கு சொதப்பி வரும் ரிஷப் பந்த் 2வது விக்கெட் கீப்பரா? தினேஷ் கார்த்திக்கிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேட்க வேண்டும், ஆனால் ஒருவரும் கோலியிடம் கேட்பதில்லை, ரவிசாஸ்திரியிடமும் கேட்பதில்லை.

 

அதனால்தான் கோலியினால் தன் மற்றும் அணி நிர்வாகத்தின் தவறுகளை மறைத்து திறமையாகப் பேச முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x