Last Updated : 16 Mar, 2019 11:48 AM

 

Published : 16 Mar 2019 11:48 AM
Last Updated : 16 Mar 2019 11:48 AM

ஐபிஎல் முடியட்டும், உலகக்கோப்பை வாய்ப்பு தானா வரும்: ரஹானே நம்பிக்கை

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி, ரன்களைச் சேர்த்தால், உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வாய்ப்பும், அழைப்பும் வரும் என்று நம்புகிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்திய அணி கடந்த ஒன்றை ஆண்டுகளாக பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்தும், இன்னும் 4-வது மற்றும் 5-வது இடத்துக்கான சரியான வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ரஹானே, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே ஆகியோர் இருந்தும் இவர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய தேர்வுக்குழு பயன்படுத்தி வருகிறது.

அதிலும் ஜூனியர் திராவிட் என்று அழைக்கப்படும் ரஹானே ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நீக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை போட்டி நெருங்கும் நிலையில், 4-வது இடத்துக்கான சரியான வீரரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ரஹானேவை 4-வது இடத்துக்குத் தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:

''உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எனக்கான இடம், வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. இன்னும் தேர்வு செய்வதற்கு அதிகமான நாட்கள் இருக்கின்றன. ஐபிஎல் போட்டியில் நான் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்க்கும் போது இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வரும்.

ஆதலால், இந்திய அணியில் இடம் பெறமுடியவில்லையே என்ற அழுத்தத்தை நான் எனக்குள் கொண்டுவரப் போவதில்லை. என்னுடைய கவனம் அனைத்தும், இப்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே. ஐபிஎல் போட்டியில் அதிகமான ரன்களை அடித்து, திறமையை நிரூபித்தால், அதுவே இந்திய அணியின் பக்கம் அழைத்துச் சென்றுவிடும்.

இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தால், ராஜஸ்தான் ராயல்ஸ்அணி குறித்து நான் யோசிக்க முடியாது. எனக்கு முன் இருக்கும் பாதையைப் பற்றி அதிகமாக சிந்திப்பதைக் காட்டிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்தே அதிகமாகச் சிந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும்போது, உலகக்கோப்பை வாய்ப்பு தானாகத் தேடி வரும்.

கடந்த ஆண்டு எங்கள் அணியில் முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது வருத்தம்தான். ஆனால், இந்த ஆண்டு அவர் அணிக்குத் திரும்புவது மகிழ்ச்சிதான். கடந்த ஆண்டு எங்களுக்குச் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு நிர்வாகம் நல்ல ஆதரவை அளித்ததால், எந்தவிதமான நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை.

இந்த முறை எங்கள் அணிக்கு தூதுவராகவும், ஆலோசகராகவும், ஷேன் வார்னே இருப்பது மிகப்பெரிய பலம். நான் முதன்முதலில் ராஜஸ்தான் அணியில் இடம் பெறும்போது, ஷேன் வார்ன் தலைமையில்தான் விளையாடினேன். ஆனால், அந்தத் தொடருடன் அவர் விலகிவிட்டார். மிகப்பெரிய 'லெஜன்ட்' வார்ன். அவரிடம் இருந்து அணி வீரர் என்கிற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் கிரிக்கெட் குறித்து அதிகமாகக் கற்க வேண்டும்''.

இவ்வாறு ரஹானே தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x