Published : 07 Mar 2019 05:19 PM
Last Updated : 07 Mar 2019 05:19 PM

இந்தியாவை வெல்ல முதலில் ‘ஸ்பின்’ பவுலிங்கிற்கு எதிரான தடுமாற்றத்தை ஆஸி. கைவிட வேண்டும்

ஆஸ்திரேலிய அணியினர் குல்தீப், சாஹல் என்று விக்கெட்டுகளைக் கொடுத்தால் பரவாயில்லை, பந்து திரும்புவதும் இல்லை, அரைகுறையாக வீசும் ஜாதவ்விடமும் விக்கெட்டுகளைக் கொடுக்கின்றனர். இதனால் இந்திய அணியிடம் இன்னொரு தொடர் தோல்வியைச் சந்திப்பதை ஆஸ்திரேலியா தவிர்க்க போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

ஒருமுறை இங்கிலாந்து அணி இப்படி வெற்றி பெறத் திணறிக்கொண்டிருந்த போது, பாகிஸ்தான் இங்கிலாந்தை சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் தி இந்து ஆங்கிலத்தில் பத்தி எழுதிய ஆங்கிலேயர் டெட் கார்பெட்  இப்படி எழுதினார்: ‘வக்கார் யூனிசும், முஷ்டாக் அகமதும் இங்கிலாந்தை ஆரஞ்சு பழத்தில் பந்து வீசியே வீழ்த்தி விடுவார்கள் போலிருக்கிறது’ என்று பிரமாதமான நகைச்சுவையுடன் எழுதினார்.

 

இன்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இதே நகைச்சுவை பொருந்துவதாகவே உள்ளது.

 

குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ் இவர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் பிரச்சினைகளை சரி செய்து கொள்வது அவசியம். இது இந்தத் தொடருடன் முடிவதில்லை, உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா தன் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானைச் சந்திக்கிறது, ரஷீத் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளிக்கவே வாய்ப்புள்ளது.  அதற்கு முன்பாக இந்திய ஸ்பின்னர்களை நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது.

 

அன்று ஜடேஜாவை கவாஜா தாக்கி ஆடினார், குல்தீப் யாதவ் பந்தையும் பிஞ்ச் சிக்சுக்குத் தூக்கினார், ஆனால் அதன் பிறகே ராங் ஒன், பிளிப்பரில் பீட்டன் ஆனார். பிறகு வழக்கமான ஸ்வீப் ஷாட்டிற்கு முன் கூட்டியே சென்றார் அந்தப் பந்தை ஸ்வீப் ஆட முடியாது எல்.பி.ஆனார். சச்சின் டெண்டுல்கர் போன்றோர் ஸ்வீப் ஆடும்போது பந்தின் லைனை நன்றாகக் கணித்து எல்.பி.லைனில் இல்லாத போதுதான் ஸ்வீப் ஆடுவார், அத்தகைய கணிப்பு ஆஸி. பேட்ஸ்மென்களுக்கு அவசியம். அன்று கவாஜாவும்  இப்படித்தான் ஃபுல் பந்தை ஸ்வீப் ஆடப்போய் வீழ்ந்தார்.  இருவரும் போன பிறகே ஜடேஜாவும் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசத் தொடங்கினார், குல்தீப் தன்னிடம் உள்ள ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்தினார்.

 

ஷான் மார்ஷ் ஸ்பின் பந்து வீச்சில் நன்றாக ஆடக்கூடியவர் ஜடேஜாவின் அதிதிருப்ப பந்தை லெக் திசையில் தொட்டார் தேவையில்லாமல் அவுட் ஆனார்.  மேக்ஸ்வெல் ஹைதராபாத் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ்வை 3 பவுண்டரிகள் விளாசினார். நாக்பூரிலும் அடித்து ஆடப் போனார் தவறான பந்தை அதாவது புல்ஷாட் ஆட முடியாத பந்தை முன் கூட்டியே புல் ஷாட்டுக்குச் சென்றார். ஸ்டம்ப் தொந்தரவானது. 

 

ஸ்பின் பந்து வீச்சில் திணறி விக்கெட்டுகளைக் கொடுப்பதால் புதிதாக வரும் பேட்ஸ்மென்களுக்கு கடும் சிரமமாகி சுமார் 13 ஓவர்கள் பவுண்டரியே அடிக்க முடியாமல் போனது.  ஜாதவ்வையும் இவர்களால் ரன் அடிக்க முடியவில்லை என்பதே கொடுமை.  நாக்பூரில் 189 ஸ்பின் பந்துகளில் 89 பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் ரன் எடுக்கவில்லை.

 

ஒருமுறை சாஹலிடம் 6 விக்கெட்டுகளை கொடுத்து 230 ரன்களுக்குச் சுருண்டு ஆஸி. தோற்றது.

 

ஆகவே ஆஸ்திரேலியா செய்ய வேண்டியது முதலில் ஸ்பின் பவுலிங் வந்தால் பதற்றமடையாமல், அதிகமான ஷாட்களை தப்பும் தவறுமாகப் பயன்படுத்துவதை விடுத்து ஒரேயடியாக அறுவை போட்டு தங்களுக்கு தாங்களே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்வதையும் விடுத்து இன்னும் உறுதியுடன் சிங்கிள், சிங்கிளாக ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், அவ்வப்போது தளர்வான பந்துகளை விளாச வேண்டும்.  ஆனால் ஆஸி.யினர் ஸ்பின் என்று வந்தவுடனேயே பதற்றத்தில் அதிக ஷாட்களை ஆடுகின்றனர், இல்லையெனில் ஒரேயடியாக மந்தமாக ரன் இல்லாமல் ஆடுகின்றனர்.

 

இந்த அணுகுமுறையை ஒழித்து பழைய ஆஸ்திரேலியாவாக வெற்றி வழிக்கு திரும்ப வேண்டுமெனில் ஸ்பின் பவுலிங்கை அவர்கள் இந்த மீதி 3 போட்டிகளில் திறம்படக் கையாண்டு வெற்றி பெறுவதோடு, பிறகு யு.ஏ.இ.தொடரிலும் ஸ்பின் பலவீனத்திலிருந்து மேலேறி இன்னொரு படி போய் சாவதானமாக ஆடும் பழக்கத்தையும் அகவயப்படுத்தினால்தான் உலகக்கோப்பையிலும் இந்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x