

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு, நேபாள கிரிக்கெட் அணி வீரர் சந்தீப் லாமிசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
நேபாள அணி வீரரான சந்தீப் லாமிசன், டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவைப் பார்த்து நான் பந்துவீசக் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனது மானசீக குரு. அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவரிடமிருந்து பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். சுழற்பந்து வீச்சில் அவர் மிகப்பெரிய ஜாம்பவான். அவரைப் பின்பற்றி பந்துவீச ஆசைப்படுகிறேன். கடந்த சீசனின்போது அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பந்துவீச்சில் என்னை மேம்படுத்துவதற்கு அவர் பல டிப்ஸ்களைத் தந்தார். மிகவும் தைரியத்துடன் பந்துவீச அவர் கற்றுத் தந்தார். பந்துவீசும்போது தைரியம் மிகவும் முக்கியம் என்பதை எனக்கு அவர் புரிய வைத்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடினேன். இது எனக்கு நல்ல அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. அந்த அனுபவம் ஐபிஎல் போட்டியின்போது உதவும்.
ஐபிஎல், பிக்பாஷ் டி20 லீக் போட்டிகளில் என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சி செய்வேன். அதைத் தவற விடமாட்டேன்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல வீரர்களுக்கு மிகப்பெரிய தளமாக இருந்து உதவி வருகிறது. என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப்பெரிய போட்டியாகும் இது. கடந்த சீசனில் நான் அனுபவித்து விளையாடினேன். டெஸ்ட் போட்டிகள் விளையாடாத நாடுகளில் உள்ள வீரர்களுக்கு ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகள் மிகப்பெரிய வரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.