Published : 29 Mar 2019 06:28 PM
Last Updated : 29 Mar 2019 06:28 PM

விராட் கோலி கடும் கோபம்: நோ-பால் சர்ச்சையில் நடுவர் ரவி நீக்கப்படுவாரா?

ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவையான நிலையில் மலிங்கா வீசிய நோ-பாலை பார்க்காமல் விட்டார் நடுவர் சுந்தரம் ரவி. இதனையடுத்து தோற்ற கேப்டன் விராட் கோலியும் ஜெயித்த கேப்டன் ரோஹித் சர்மாவும் இது மாதிரி தவறுகள் ஒரு போதும் நிகழக்கூடாது என்று காட்டமாகத் தெரிவித்ததையடுத்து நடுவர் சுந்தரம் ரவி ஐபிஎல் நடுவர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்நிலையில் அவரை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது சுந்தரம் ரவிக்கு ஆட்ட நடுவர் நெகட்டிவ் மார்க்தான் போட முடியும்.

 

ஐபிஎல் போட்டிகளுக்காக மொத்தம் டிவி மற்றும் களத்திற்காக 11 இந்திய நடுவர்களே உள்ளனர். எனவே ரவிக்கு நெகட்டிவ் மார்க் விழுமே தவிர அதைத்தாண்டி பிசிசிஐ எதுவும் செய்யாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 “இப்போதைக்கு கள மற்றும் 3வது நடுவர்கள் பணிக்கு 17 பேர்தான் உள்ளனர். இதில் 11 இந்தியர்கள் 6 அயல்நாட்டு நடுவர்கள். இதைத்தவிர 4வது நடுவராக 6 இந்தியர்கள் உள்ளனர்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் உள்ள ஒரே நடுவர் சுந்தரம் ரவிதான். இந்த எலைட் நடுவர்தான் நேற்று மலிங்காவின் நோ-பாலைப் பார்க்காமல் விட்டார், இதனால் தோல்வியடைந்த ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, நடுவர்கள் தூங்கக்கூடாது என்பதைச் சூசகமாக ஆனால் காட்டமாகத் தெரிவித்தார்.

 

ரவியுடன் நடுவர் பணியாற்றிய நந்தன் பிசிசிஐ சிறந்த நடுவர் விருது பெற்றவர் என்பதும் முரண்நகையாகிப் போனது.

 

இவர்கள் இருவரையும் பிளே ஆஃப் சுற்றில் பிசிசிஐ ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பயன்படுத்தாது என்று ஒரு சில தரப்புகளில் கூறப்படுகிறது. 

 

நடந்து முடிந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடுவர்கள் பிழைக்குப் பெயர் பெற்றதாக அமைந்தது, அரையிறுதியில் புஜாரா அவுட் கொடுக்கப்படவில்லை. வினய் குமார் எட்ஜ் நடுவர் காதில் விழவில்லை இதனையடுத்து நாட் அவுட் கொடுக்கப்பட்டதால் அவர் சதம் எடுத்ததும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x