Published : 25 Mar 2019 06:30 PM
Last Updated : 25 Mar 2019 06:30 PM

ரிஷப் பந்த் கொடுத்த ‘ஷாக்’ ?- மலிங்காவைப் போராடி மும்பை அழைப்பு: பிசிசிஐ அழுத்தத்திற்கு தலையசைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்

லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொடுத்த அதிர்ச்சி, அதைவிட ரிஷப் பந்த் கொடுத்த ஷாக்கினால் எப்பாடுபட்டாவது ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ லஷித் மலிங்காவை கொண்டு வர வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் நினைத்தது.

 

‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்’ என்பதற்கு ஏற்ப பிசிசிஐ, லஷித் மலிங்கா ஐபில் போட்டிகளில் விளையாட அனுமதிக்க  வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

 

அதாவது மும்பை இந்தியன்ஸ் அடுத்ததாக மார்ச் 28ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக பெங்களூருவிலும் மார்ச் 30ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாபை பஞ்சாபிலும் சந்திக்கவுள்ளது. இந்த 2 போட்டிகளுக்கும் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வுப் பரிசீலனைக்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையில் ஒருநாள் போட்டித் தொடர் ஒன்று நடைபெறுகிறது, இந்தப் போட்டித் தொடரில் கலந்து கொள்ளு வீரர்கள்தான் உலகக்கோப்பை இலங்கை அணித்தேர்வில் பரிசீலிக்கப்படுவார்கள் என்று சரியான குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டது.  இந்தத் தொடரில் காலே அணிக்கு மலிங்காவை கேப்டனாகவும் நியமித்து அவரது ஐபிஎல் ஆசைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

 

இந்நிலையில் பிசிசிஐ தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மலிங்க தொடக்கத்திலேயே சில ஐபிஎல் போட்டிகளில் ஆட இலங்கை கிரிக்கெட் வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

 

‘மலிங்கா எங்களது சிறந்த பவுலர் ஒருநாள் போட்டிகளில் அவரது இடம் உறுதியானதுதான், ஆகவே உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறுவார் என்று தலைமைத் தேர்வாளரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஷந்தா டிமெல் தெரிவித்துள்ளார்.

 

மலிங்கா இந்தியாவில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இன்னொரு இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

 

பிசிசிஐ கேட்டு மறுக்க முடியுமா? என்று மலிங்காவுக்கு இந்த சிறப்பு உரிமையை வழங்கியதையடுத்து  இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் சிலர் புலம்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x