Last Updated : 01 Mar, 2019 06:12 PM

 

Published : 01 Mar 2019 06:12 PM
Last Updated : 01 Mar 2019 06:12 PM

உலகக்கோப்பை அணித் தேர்வில் ஐபிஎல் ஆட்டங்கள் எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தாது: விராட் கோலி திட்டவட்டம்

நாளை முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அடிக்கும் ரன்கள், எடுக்கும் விக்கெட்டுகள் ஆகியவை உலகக்கோப்பை அணித்தேர்வில் செல்வாக்கு செலுத்தாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

உலகக்கோப்பை அணியில் 13 வீரர்களில் 12 வீரர்கள் இடம் ஏறக்குறைய முடிவாகி விட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் அணித்தேர்வுக்கான ஒரே வாய்ப்பாக இருக்கும் என்பதை கோலி சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“இல்லை, உலகக்கோப்பை அணித்தேர்வில் ஐபிஎல் செல்வாக்குச் செலுத்தாது, இது மிகவும் தீவிரமான ஒரு கணிப்பாகும்.

 

நமக்கு திடமான ஒரு அணி தேவை. ஐபிஎல் தொடருக்கு முன்னரே உலகக்கோப்பைக்கு என்ன மாதிரியான அணி தேவை என்பதை நாம் மிகமிகத் தெளிவாக முற்றுத் தெளிவுடன் இருக்க வேண்டிய தேவையுள்ளது. , ஒரு சில வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் எப்படி அமையும் என்பதைப் பொறுத்து உலகக்கோப்பை அணியில் மாற்றமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

ஐபிஎல் தொடரில் ஓரிரு வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பதால் உலகக்கோப்பைக்கு அவர்கள்  இடம் பரிசீலிக்கப் பட மாட்டாது என்பதும் கிடையாது.  நாம் அணிச்சேர்க்கை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.  ஒரு பவுலர் குறைவாக ஆடுவது நல்ல உத்தி கிடையாது. குறிப்பாக 40வது ஓவர் வரை கூடுதல் பீல்டர் இருக்கும் போது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பவுலர்களுக்கு ஓவர்களை வழங்க முடியாது.

 

முதலில் அணிக்குத் தேவையான் பேட்டிங் வரிசையை நிர்ணயிக்க வேண்டும், அதன் பிறகு அவர்களுக்கு சில போட்டிகள் வாய்ப்பளித்து சோதிக்க வேண்டும். ஆனால் பவுலிங் சேர்க்கையில் நான் பெரிய மாற்றங்களை எதிர்நோக்கவில்லை.

 

கேஎல். ராகுலிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன, மிகவும் திடமான அணுகுமுறை அவருடையது, கிரிக்கெட் ஆட்டத்திற்குரிய ஷாட்களை ஆடி ஸ்ட்ரைக் ரேட்டையும் 140-150 என்று வைத்து போட்டிகளை வென்று கொடுக்கும் ஒரு சீரான வீரரைக் காண்பது அரிது.

 

கடைசியாக உலகக்கோப்பைக்கு என்ன மாதிரியான அணி அமையப்போகிறது என்பது சுவாரசியமானதுதான். ஆனால் ராகுல் தன்னைத் தேர்வு செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். அவர் நல்ல பார்மில் இருப்பது நல்லது, அவர் இந்த பார்மை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

 

நிருபர் கேள்விக்கு எரிச்சலான கோலி:

 

அணிச்சேர்க்கை, உலகக்கோப்பை அணி என்று பரிசோதனை முயற்சி செய்து கொண்டிருந்தால் நடைபெறும் போட்டிகளை வெல்வது முக்கியமல்லவா என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு கோலி எரிச்சலடைந்து, “தொடரை வெல்வதற்காகத்தான் ஆடுகிறோம் அப்படியில்லை எனில் பந்தை ஆடாமல் விட்டு ஸ்டம்பை அடிக்கட்டும் என்று விட்டு விடுவோமே” என்று கிண்டலாகப் பதில் அளித்தார்.

 

பிறகு நிதானமடைந்த கோல்லி, “நான் ஏற்கெனவே கூறியது போல் குறிப்பிட்ட சூழலில் ஒரு வீரர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறோம், அவரை அதே சூழலில் மீண்டும் இறக்குவோம். சில சூழலில் சில வீரர்கள் ஒத்துவரவில்லை என்பதற்காக அவருக்குத் திறமை இல்லை என்ற அர்த்தம் இல்லை.

 

டி20 தொடரில் தோற்கக் காரணம், நாம் நல்ல கிரிக்கெட்டை ஆடவில்லை, 2வது போட்டியில் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடினர். ஏன் தோல்வியடைந்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

 

அவர்கள் மனப்பூர்வமாக ஆடவில்லை என்று வெளியிலிருந்து சொல்லலாம், வெற்றி பெறத்தான் ஒவ்வொருமுறையும் ஆடுகிறோம். நாம் பரிசோதனை மட்டுமே செய்கிறோம் என்றால் எல்லோரும் சிக்சர்கள் அடிக்கப்போய் ஆட்டமிழந்து நாம் 50 ரன்களுக்கு ஆல் அவுட்தான் ஆவோம்.

 

இவற்றையெல்லாம் எதிர்மறையாகப் பார்த்தால் அதிலிருந்து எதிர்மறை விஷயங்களைத்தான் நீங்கள் எடுக்க முடியும் , பாசிட்டிவாக பார்த்தால் மட்டுமே பாசிட்டிவ் ஆக விஷயங்களை எடுக்க முடியும்.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x