Published : 25 Mar 2019 09:55 AM
Last Updated : 25 Mar 2019 09:55 AM

உலகக்கோப்பையில் இந்திய அணியில் பும்ரா பங்கேற்பாரா?

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ராவுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

மும்பையில் நேற்று 12-வது ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 37 ரன்கல் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில், இதில் 20-வது ஓவரின் கடைசிப் பந்தை  பும்ரா வீசினார். அப்போது திடீரென பந்தை தடுக்க ஓடிவந்து குனிந்தபோது, பும்ரா கீழே விழுந்தார். இதில் பும்ராவுக்கு  இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, தோள்பட்டையை நகர்த்தக் கூட முடியாமல் கீழே சரிந்தார். உடனடியாக அனைத்து வீரர்களும் அங்கு வந்து கூடினார்கள். ஆனாலும் பும்ராவால் தனது இடதுகையை தூக்க முடியவில்லை.

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் உடற்தகுதி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பும்ரா ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காயத்தின் தன்மை ஏதும் தெரியாத நிலையில், தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இடம் பெறுவாரா என்பது சந்தேகம்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணித் தரப்பில் கூறுகையில், " பும்ராவுக்கு லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து நாளை தெரிவிக்கிறோம். விரைவில் குணமடைந்துவிடுவார் " என மட்டும் தெரிவித்தனர்.

ஆனால், நேற்றைய போட்டியில் பும்ரா காயமடைந்து வலியால் துடித்தபோது, அது சாதாரண காயம் என்று யாரும் கூற முடியாது. ஆனால், பும்ராவின் காயத்தைப் பார்த்து, இந்தியத் தேர்வாளர்கள், அணி நிர்வாகம் கவலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சுப் படையின் முக்கியத் துருப்புச்சீட்டு பும்ரா என்பதில் சந்தேகமில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், பும்ராவின் உடல்தகுதி மிகவும் முக்கியம் என்று தேர்வாளர்கள் கருதுகிறார்கள்.

கடந்த ஜூலை மாதம், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது, பும்ராவின் கைவிரல்களில் காயம் ஏற்பட்டது, அதன்பின் அந்த காயம் எலும்பு முறிவுவரை சென்றதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் பும்ரா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x