

நடிகர் ரஜினிகாந்த மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. தேசிய அளவில் பல்வேறு துறையைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ஹர்பஜன் சிங் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
ட்விட்டரில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹர்பஜன், அதனுடன், "வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ரெண்டு ஸ்டெம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம். எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பல முறை தமிழில் ட்வீட் செய்து வருகிறார் ஹர்பஜன். அவரது தமிழ் ட்வீட்டுகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது இந்தத் தமிழ் ட்வீட்டும் பலரால் பாராட்டப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.