Published : 10 Mar 2019 03:58 PM
Last Updated : 10 Mar 2019 03:58 PM

மீண்டும் ரோஹித் முதலிடம்; தோனிக்கு பின்னடைவு உள்நாட்டில் புதிய மைல்கல் : தவண் சதம்

மொஹாலியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது. இந்திய அணி 2-1 என்ற முன்னிலையில் இருப்பதால், இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும்  முனைப்பில் விளையாடி வருகிறது.

டாஸ்வென்ற கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி  தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார்கள். ஷிகர் தவண் அதிரடியாக ஆடியபோதிலும் ரோஹித் சர்மா  நிதானம் காட்டினார். தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரோஹித் சர்மாவும் தன்னுடைய வழக்கமான காட்டடிக்கு திரும்பினார்.

இருவரின் கூட்டணி, சச்சின், சேவா ஜோடி சேர்த்த ரன்களையே முறியடித்துவிட்டது. சச்சின், சேவாக் கூட்டணி ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தில் இருந்தனர். ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி  இந்த போட்டியில் அந்த சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 389 ரன்கள் சேர்த்து சச்சின், சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளினார்கள்.

இந்த போட்டியில் காட்டடி அடித்த ரோஹித் சர்மா 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்து வந்தார்.  216 சிக்ஸர் என்று ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்த நிலையில் ராஞ்சியில் நடந்த  3-வது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மாவின் சாதனையை தோனி முறியடித்தார். 217 சிக்ஸர்கள் எண்ணிக்கையை அடைந்து ரோஹித் சர்மாவை 2-வது இடத்துக்கு தள்ளினார தோனி.

இன்று நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆட்டத்தில், ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்து மீண்டும் தோனியை 2-வது இடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா(218சிக்ஸர்) பெற்றுள்ளார்.

மேலும், உள்நாட்டில் நடந்த போட்டிகளில் ரோஹித் சர்மா 3 ஆயிரம் ரன்களையும் இந்த போட்டியில் கடந்து, ரோஹித் சாதனை படைத்துள்ளார்.

சதத்தை நோக்கி முன்னேறிய ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 95 ரன்களில் (92பந்துகள்) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு தவண், ரோஹித் சர்மா கூட்டணி 193 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

சிறப்பாக ஆடிய ஷிகர் தவண் 97 பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் தனது 16-வது சதத்தை நிறைவு செய்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x