Last Updated : 07 Mar, 2019 09:02 AM

 

Published : 07 Mar 2019 09:02 AM
Last Updated : 07 Mar 2019 09:02 AM

ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அசத்தியது எப்படி?- மனம் திறக்கிறார் விஜய் சங்கர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசியதற்கு பும்ராவின் ஆலோசனைகள் பெரிதும் உதவியாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி, ஆல்ரவுண்டரான விஜய் சங்கரின் கையில் பந்தை கொடுத்தார்.

எஞ்சிய 2 விக்கெட்களையும் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி சாத்தியமாகும் என்ற சூழ்நிலையில் பந்து வீசிய விஜய் சங்கர், முதல் பந்திலேயே சிறந்த பார்மில் இருந்த மார்கஸ் ஸ்டாயினிஸை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். மேலும் 3-வது பந்தில் கடைசி வீரரான ஆடம் ஸம்பாவை ஸ்டெம்புகள் சிதற விஜய் சங்கர் வெளியேற்ற வெற்றி இந்திய அணியின் வசமானது.

ஆட்டம் முடிவடைந்ததும் விஜய் சங்கர் கூறியதாவது:நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன், அணிக்கு தேர்வு செய்யப்படுவது குறித்தோ அல்லது உலகக் கோப்பையில் இடம் பெறுவது குறித்தோ ஒருபோதும் சிந்தித்தது இல்லை. ஏனெனில் அதற்கு இன்னும் காலம் உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

நேர்மையாகக் கூறவேண்டுமெனில் இலங்கையில் நடைபெற்ற நிடாஸ் டிராபி தொடர் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்துள்ளது. அந்தத் தொடருக்கு பிறகுதான் நடுநிலையாக எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். உயர்வோ, தாழ்வோ அதைப் பற்றி கவலைப்படக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாகவும், நடுநிலையுடனும் இருக்க வேண்டும்.

நாக்பூர் ஆட்டத்தில் சவாலுக்கு தயாராகவே இருந்தேன். ஏனெனில், எப்படியும் நான் ஒரு ஓவரை வீச வேண்டியது இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். 43, 44-வது ஓவருக்கு பிறகு எந்த நேரம் வேண்டுமானாலும் நான் பந்து வீச அழைக்கப்படக்கூடுமென எனக்கு நானே கூறிக்கொண்டேன். அது கடைசி ஓவராகக் கூட இருக்கலாம். எனவே 10 அல்லது 15 ரன்கள் எதிரணிக்கு தேவையாக இருந்தால் கூட விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்று மனதளவில் தயாராகினேன்.

48-வது ஓவர் முடிவடைந்ததும் ஜஸ்பிரித் பும்ரா என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. அதனால் நீ, சரியான நீளத்தில் பந்து வீசுவது அவசியம் என்றார். அவர், கூறியதும் தெளிவடைந்தேன். 11 ரன்களை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் நேராக ஸ்டெம்புகளுக்கு வீச வேண்டும், விக்கெட்களை வீழ்த்துவதான் வெற்றிக்கு ஒரே வழி என்று முடிவு செய்தேன்.

கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி விட்டதால் மட்டும் என்னை உயர்வாகவோ அல்லது மகிழ்ச்சியாகவும் உணரவில்லை. பேட்டிங்கின் போது நான் ரன் அவுட் ஆனேன். இதுபோன்ற ரன் அவுட்டை நான் துரதிருஷ்டவசம் என்று கூறமாட்டேன். அந்த சமயத்தில் விராட் கோலி பந்தை கடினமாக அடித்தார். கிரீஸுக்குள் திரும்பி வருவதற்கு எனக்கு போதுமான நேரம் இல்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் கிரிக்கெட்டில் இடம்பெறவே செய்யும். நீண்ட நேரம் சிறப்பாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்.

இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.

இந்திய அணி த்ரில் வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தில் விஜய் சங்கர் பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். 41 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த அவர், 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப்பை சிறப்பாக கட்டமைக்கவும் உதவியிருந்தார்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x