

இங்கிலாந்து அணியில் மீண்டும் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி பாய்காட்.
ஸ்போர்ட் 24 பேட்டியில் அவர் கூறும் போது, “கெவின் பீட்டர்சன் இங்கிலாந்துக்கு மேட்ச்-வின்னிங் ஆட்டங்களை ஆடக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் சில தலைவலிகளைக் கொடுப்பார்.
அதனைச் சமாளிக்க தற்போதைய கேப்டன் அலிஸ்டர் குக் லாயக்கற்றவர். முன்னாள் கேப்டன்களில் மைக்கேல் வான் போன்றவர்கள் பீட்டர்சன் போன்ற ஆளுமைகளைத் திறமையாகக் கையாள்வார். ஆனால் குக்கினால் முடியாது.
ஆகவே பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்துக்காக ஆடுவது கடினமே” என்றார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என்று முற்றழிப்பு செய்யப்பட்டதையடுத்து பலிகடாவாக்கப்பட்டார் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்கிய முன்னணி ரன் ஸ்கோரர் பீட்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.