Published : 18 Mar 2019 04:51 PM
Last Updated : 18 Mar 2019 04:51 PM

கடைசி ஒருநாள் போட்டியில் கூட 3 விக்கெட் வீழ்த்தினேன்.. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நான் குறைந்தவனல்ல: அஸ்வின் பேட்டி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணிகள் அஸ்வினை மறந்தே விட்டன. உலகக்கோப்பைக்கு சாஹல், குல்தீப், ஜடேஜா என்ற சேர்க்கையையே விராட் கோலியும் அணித்தேர்வுக்குழுவும் தேர்வு செய்யும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

 

ஏதேனும் ஆச்சரியங்கள் நிகழ்ந்தால் மட்டுமே உலகக்கோப்பை அணியில் அஸ்வின் இடம்பிடிப்பார் என்ற நிலையே உள்ளது.

 

அஸ்வின் கடைசியாக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்காக ஆடி 2 அண்டுகள் ஆகிறது.

 

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் கூறியதாவது:

 

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நான் ஒன்றும் சோம்பேறி அல்ல. அதனால்தான் நான் மற்றவர்கள் என்னைப் பற்றி நினைப்பது போல் நான் நினைக்க முடியாது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் என் ரெக்கார்டுகள் அவ்வளவு மோசமானதாக இல்லை. நவீன ஒருநாள் போட்டிகளி ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான் தேவைப்படுவார்கள் என்ற நவீன கால பார்வையினால் எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதனால்தான் நான் வெளியே உட்கார்ந்திருக்கிறேன்.

 

நான் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன்.

 

என் கிரிக்கெட் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன் என்றால் என்னுடைய திறமைதான் நான் வெளியே இருக்கக் காரணம் என்று நான் ஒருபோதும் கருத மாட்டேன். இது அணிக்குத் தேவைப்படும் வீரர்கள் மற்றும் அதனை வழங்குதல் என்ற சப்ளை, டிமாண்ட் விவகாரமாகும்.

 

சையது முஷ்டாக் அலி உள்நாட்டு டி20 கிரிக்கெட்டில் ஆடினேன் அதிலும் ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டேன், அப்படித்தான் நான் என்னைப் பார்க்கிறேன். நான் கிரிக்கெட் ஆடுகிறேன், அதற்காக ஒரு வடிவத்தில் மட்டும் நான் என்னை நிபுணனாக ஆக்கிக்கொள்ளும் தேவையில்லை. நவீன கிரிக்கெட்டின் சவாலாகும் இது, என்னால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றை நான் எதிர்நோக்குகிறேன்.

 

ஒன்று பேட்ஸ்மெனை நோக்கிப் பந்தை திருப்ப வேண்டும், இல்லயேல் வெளியே திருப்ப வேண்டும். இதைத்தவிர வேறு ஒன்றும் கூடுதலாக செய்ய முடியாது என்பதை நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.  நான் என் திறமையை வளர்த்துக் கொண்டு வருகிறேன், என் பந்து வீச்சில் புதிய விதங்களை புகுத்திக் கொண்டுள்ளேன்.

 

நான் கேலரியில் இருக்கும் ரசிகர்களுக்காகவோ, சாதனைகளுக்காகவோ ஆடுபவனல்ல. அதே போல் அணியில் இடம்பிடிப்பதற்காகவும் ஆடுபவன் அல்ல. ஆட்டத்தை மகிழ்வுடன் ஆடுகிறேன், காரணம் இந்த விளையாட்டுத்தான் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. 8 வயது சிறுவனாக மட்டையையும் பந்தையும் தூக்கியது முதல் எனக்கு அனைத்தையும் இந்த ஆட்டம் வழங்கியுள்ளது.

 

இப்போதும் கூட கிளப் ஆட்டம், தெரு கிரிக்கெட்டைக் கூட மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x