

டேராடூனில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கான் வெற்றி பெற்று டெஸ்ட் உலகிற்குள் வந்து 277 நாட்களே ஆன நிலையில் முதல் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.
அயர்லாந்து ஸ்கோர் 172 மற்றும் 288, ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 314 மற்றும் 149/3. ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கான் வீரர் ரஹ்மத் 98 ரன்களை முதல் இன்னிங்சில் அறிமுக டெஸ்ட்டில் 2ரன்களில் சதத்தைக் கோட்டை விட்டு சாதனையையும் கோட்டை விட்டார், ஆனால் அவர்தான் இரண்டாவது இன்னிங்சில் 122 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்தார். இஷானுல்லா 65 நாட் அவுட். அயர்லாந்துக்கும் இது 2வது டெஸ்ட்தான்.
ஆப்கான் அணி இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது, அயர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது இந்நிலையில் ஆப்கான் அணி வரலாறு படைத்துள்ளது.
வெற்றி இலக்கான 147 ரன்களை ஆப்கான் விரட்டிய போது ரஹ்மத், இசானுல்லா 139 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பிறகு ஷா, மொகமது நபி இருவரையும் அடுத்தடுத்து ஆப்கான் இழக்க ஹஸ்மதுல்லா ஷாகிதி வெற்றி ரன்களை அடித்தார். இவர் அடித்த பவுண்டரியை அடுத்து ஆப்கான் ஓய்வறை விழாக்கோலம் பூண்டது.
2வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் அயர்லாந்தும் ஆக்ரோஷமாக ஆடவில்லை முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால் ஸ்பிரிட்டுடன் ஆடிய ஆப்கான் அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்து நல்ல முன்னிலை எடுத்தது.
4ம் நாள் காலை வரலாற்று வெற்றி கண்ணில் தெரிய ரஹ்ம்த் ஷா 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து டிம் முர்டாக் ஓவரில் விளாசினார். ஆப்கான் தரப்பில் உலகின் தலைசிறந்த லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் இந்த டெஸ்ட்டிப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகனாக ரஹ்மத் ஷா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி குறித்து ஆப்கான் கேப்டன் அஸ்கர் ஆப்கன் தெரிவித்ததாவது: ஆப்கான், எங்கள் அணி, எங்கள் மக்கள் ஆகியோருக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். உலகக்கோப்பைத் தயாரிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். நல்ல கிரிக்கெட் ஆட எங்களால் முடிந்த அளவு சிறப்பாக ஆடுவோம். என்றார்.
போட்டிகள் கணக்கில் இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக முதல் டெஸ்ட் வெற்றியை விரைவில் பெற்று ஆப்கான் 2ம் இடத்தில் உள்ளது.