Last Updated : 03 Mar, 2019 03:56 PM

 

Published : 03 Mar 2019 03:56 PM
Last Updated : 03 Mar 2019 03:56 PM

மீண்டும் வருகிறது: 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு

2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) இன்று அளித்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் போட்டி அதன்பின் 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.

மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டியைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் கவுரவ துணைத் தலைவர் ரன்திர் சிங் கூறுகையில், "2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு ஓசிஏ பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. சீனாவின் ஹாங்ஜூ நகரில் கிரிக்கெட் விளையாடப்படும்" எனத் தெரிவித்தார்.

2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருப்பதால், பெரும்பாலும் டி20 கிரிக்கெட் விளையாடப்படுவதற்கே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், பிசிசிஐ அமைப்பு பல்வேறு நாடுகளுக்கு இந்திய அணியை அனுப்பும் பயணத்திட்டத்தை வைத்திருப்பதால், இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க இயலாது. தீர ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ தெரிவித்தது.

2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஆடவர் பிரிவில் இலங்கையும், மகளிர் பிரிவில் பாகிஸ்தானும் தங்கம் வென்றன. 2010-ம் ஆண்டில் வங்கதேசமும், பாகிஸ்தானும் தங்கம் வென்றன.

கடந்த 1998-ம் ஆண்டு காமென்வெல்த் விளையாட்டில் கூட கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது. கோலாலம்பூரில் நடந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஷான் போலக் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா தங்கத்தையும், ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரலியா வெள்ளியும் வென்றன.

ஆனால், 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதனை ஓசிஏ தலைவர் ஷேக் அகமது அல் பஹத் அல் சபாப் பிசிசிஐ கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அனுப்பாதது வேதனையாகும். அவர்களின் முடிவை மதிக்கிறேன். ஆனால், இந்தப் பதவியில் இருப்பவர்கள் விளையாட்டை பிரபிலப்படுத்த விருப்பமில்லை. வர்த்தகத்தையும், பணம் சம்பாதிக்கவுமே விரும்புகிறார்கள் என நம்புகிறேன். சந்தையையும், விளையாட்டையும் அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்" என்றார்.

இந்நிலையில் 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜு நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x