Published : 02 Mar 2019 09:09 AM
Last Updated : 02 Mar 2019 09:09 AM

ஹைதராபாத்தில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் முதன்முறையாக டி 20 தொடரை 0-2 என இழந்த நிலையில் விராட் கோலி தலைமை யிலான இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கு கிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் 3 மாத காலங்கள் உள்ள நிலையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுதான்.

டி 20 தொடரைப் போன்றே ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரி லும் இந்திய அணி சில பரீட்சார்த்த முறைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் பரிசீலனையில் உள்ள கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் ஆகியோ ருக்கு போதிய அளவிலான வாய்ப்பு வழங்குவதில் அணி நிர்வாகம் முனைப்பு காட்டக்கூடும்.

இதில் கே.எல்.ராகுல் டி 20 தொடரில் முறையே 50 மற்றும் 47 ரன்கள் சேர்த்து தேர்வுக்குழு வினரின் கவனத்தை ஈர்த்தார். இதனால் மீண்டும் டாப் ஆர்டரில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங் கப்படக்கூடும். இந்த சூழ்நிலை உருவானால் சமீபகாலமாக தொடர்ச்சியாக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தத் தவறி வரும் ஷிகர் தவண் வெளியே அமரவைக்கப்படக்கூடும்.

மீண்டும் ஒருமுறை அனைவரது பார்வையும் ரிஷப் பந்த் மீது குவிந்துள்ளது. டி 20 தொடரில் அவரிடம் இருந்து சிறப்பான ஆட் டம் வெளிப்படவில்லை என்றாலும் எந்த ஒரு கட்டத்திலும் தனி ஒரு வீரராக போராடி அணியை வெற் றிக்கு அழைத்துச் செல்லும் திறன் அவரிடம் இருப்பதாக நம்பப்படு கிறது. இதனால் ரிஷப் பந்துக்கும் வாய்ப்பு வழங்குவதில் அணி நிர்வாகம் முனைப்புடன் உள்ளது.

விஜய் சங்கரை பொறுத்தவரை யில் அவரது பந்துவீச்சு இன்னும் நம்பிக்கை அளிக்கும் வகை யில் இல்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்துள்ள தால் அணித் தேர்வுக்கான வரிசை யில் உள்ளார். உடற்தகுதியை பெறும் பட்சத்தில் ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திக்பாண்டியாவே முதல் தேர்வாக இருப்பார். எனினும் விஜய் சங்கரை இரண்டாவது ஆல்ரவுண்டராக தேர்வு செய்யும் எண்ணம் தேர்வுக்குழுவினருக்கு உள்ளது.

இதனால் ஹர்திக்பாண்டியா இடத்தில் தற்போதைக்கு விஜய் சங்கர் களமிறங்கக்கூடும். சித்தார்த் கவுல், உலகக் கோப்பை தொடருக் கான அணியில் இடம் பெறுவது என்பது அரிது என்றே கருதப்படு கிறது. கலீல் அமகது சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத் தாலேயே சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் விளையாடும் லெவனில் சித்தார்த் கவுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்பது சற்று சந்தேகமே. ஏனெனில் ஜஸ்பிரித் பும்ராவுடன் தற்போது அனுபவ வீரரான மொகமது ஷமியும் இணைந்துள்ளார். ஷமி, நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி நடு ஓவர்களில் ஆஸ்தி ரேலிய அணிக்கு அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவும் அணியில் இருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இதேபோல் பேட்டிங்கில் அம்பதி ராயுடு பலம் சேர்க்கக்கூடும்.

ஆரோன் பின்ச் தலைமையி லான ஆஸ்திரேலிய அணி டி 20 தொடரை வென்ற உற்சாகத்தில் களறமிங்குகிறது. கிளென் மேக்ஸ் வெல், டி’ஆர்சி ஷார்ட் ஆகியோரி டம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இவர்களுடன் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகியோர் பேட்டிங் கில் பலம் சேர்க்கக்கூடும்.

ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஹை ரிச்சர்ட்சன், பாட் கம்மின்ஸ் ஆகி யோருடன் ஐபிஎல் பிரபலம் ஆன்ட்ரூ டையும் இணைந்துள்ளது வேகப் பந்து வீச்சின் பலத்தை அதிகரித்துள்ளது. சுழற்பந்து வீச்சில் நேதன் லயனின் அனுபவ மும் கைகொடுக்கக்கூடும்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தோனி காயம்

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று தோனி பீல்டிங் பயிற்சி யில் ஈடுபட்ட போது காயம் அடைந்தார். த்ரோடவுன் பயிற்சியாளர் ராகவேந்திரா வீசிய பந்தை தோனி பிடிக்க முயன்ற போது வலது முழங்கையை தாக்கியது.

காயம் அடைந்த தோனி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அதன் பின்னர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இத னால் இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்குவாரா என் பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

‘ஐபிஎல் செல்வாக்கு எடுபடாது’

உலகக்கோப்பை தொடருக்கான அணிக்கு ஏறக்குறைய 12 முதல் 13 வீரர்களின் இடங்கள் உறுதியாகி உள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான வீரர்களை இறுதி செய்வதற்கான தொடராக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் அமையக்கூடும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று கூறுகையில், “ உலகக்கோப்பைக்கான அணித்தேர்வில் ஐபிஎல் தொடர் செல்வாக்குச் செலுத்தாது. நமக்கு திடமான ஒரு அணி தேவை. ஐபிஎல் தொடருக்கு முன்னரே உலகக்கோப்பைக்கு என்ன மாதிரியான அணி தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது உள்ளது.

ஒரு சில வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் எப்படி அமையும் என்பதைப் பொறுத்து உலகக்கோப்பை அணியில் மாற்றமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஒருசில வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் உலகக்கோப்பை தொடருக்கு அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்பதும் கிடையாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x