Last Updated : 12 Mar, 2019 11:31 AM

 

Published : 12 Mar 2019 11:31 AM
Last Updated : 12 Mar 2019 11:31 AM

குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசும் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறினார்.

டெல்லி வந்துள்ள மேத்யூ ஹேடன் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணியில் தற்போது குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகிய 2 மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இருவருமே மிகத் திறமையாக பந்துவீசுகிறார்கள். ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களை தங்களது பந்துவீச்சால் அவர்கள் பயமுறுத்தி வருகின்றனர்.

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்று அழைக்கக்கூடிய மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வது எப்போதுமே கடினமாக இருக்கும். வழக்கமாக விரல்களை சுழற்றி பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தைரியம் சற்று குறைவே. ஆனால் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தைரியமாக பந்துகளை வீசி எதிரணி வீரர்களை மிரட்டுவார்கள்.

என்னைக் கேட்டால் சாஹலின் பந்தை விட குல்தீப் யாதவ் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்று சொல்வேன். அவரது பந்துவீச்சு முறையைப் பார்த்தால், எங்கள் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே பந்துவீச்சைப் போல் உள்ளது. வார்னே வீசும் பந்து, காற்றிலேயே சுழன்று வரும். அதைப் போலவே குல்தீப் யாதவின் பந்தும் சுழன்று வருகிறது.

சாஹலும் சிறந்த பந்துவீச்சாளர்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது பந்துவீச்சு வித்தியாசமானது. அவரது பந்துகள் நேராக ஸ்டம்பை நோக்கி வரும். பந்துகள் நேராகவும், கிடைமட்டமாகவும் வந்து எதிரணி வீரர்களை மிரட்டும்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் ஆஷ்டன் டர்னர் அபாரமாக விளையாடினார். அனைத்து வீரர்களுமே சிறப்பாக தங்களது பங்கைக் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x