

2010, 2011, 2018 ஆகிய ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற மஞ்சள் படை, தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறையும் கோப்பையை விடுவதாக இல்லை. அதற்கான சீரிய பயிற்சிகளுடன் தங்கள் முனைப்பை வெளிப்படுத்தியுள்ள தோனி படை, முதல் போட்டியில் கோலி தலைமை ஆர்சிபியை பெரிய அளவில் வீழ்த்தி 4வது கோப்பைக்கு அச்சாரமிடத் தயாராகி வருகிறது.
அதுவும் மார்ச் 23ம் தேதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இருபெரும் மலைகள் மோதவுள்ளதால் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு ஏலத்தில் ஐபிஎல் வீரர்கள் தேர்வு கடுமையாக பகடி செய்யப்பட்டது. தோனி (36), ரெய்னா (31), டுபிளெசிஸ் (33), டிவைன் பிராவோ (34), ஆகியோர் வயதைக் குறிப்பிட்டு ஏகப்பட்ட கிண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஓல்டு இஸ் கோல்டு என்பதற்கேற்ப கோப்பையைத் தட்டிச் சென்றது சிஎஸ்கே, ஒருவிதத்தில் இதற்கு மற்ற அணிகளும் சொதப்பலாக ஆடி உதவியதையும் சில போட்டிகளில் பார்த்தோம், ஓரிரு முக்கியப் போட்டிகளில் நடுவர் தீர்ப்புகளும் சிஎஸ்கே பக்கம் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
ஷேன் வாட்சன் 36 வயதானாலும் இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமான சதமடித்து இறுதி நாயகன் ஆனார். தோனி எப்போதும் அனுபவம் பக்கமே நிற்பார், அதே போல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென், பவுலர் என்பதை விட ஆல்ரவுண்டர்களுக்கு தோனி அதிக முக்கியத்துவம் அளிப்பார், மேலும் டி20 கிரிக்கெட்டிம் சாணக்கியன் தோனி என்றே கூறலாம் அந்த அளவுக்கு அணித்தேர்வில் கவனம், ஓவர்களை மாற்றுவதில் கவனம், டவுன் ஆர்டரில் கவனம், களவியூகத்தில் கவனம் என்று அவர் சிஎஸ்கேவுக்கு ஆடும்போது இந்திய அணிக்காக ஆடும்போது பார்க்க முடியாத உத்வேகத்துடன் களமிறங்குவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
டாப் ஆர்டரில் வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி, கேதார் ஜாதவ், பிராவோ கீழ்நடுவரிசையில் வலுவாக உள்ளனர். பிராவோ மூலம் சிஎஸ்கேவுக்கு முடிவு ஓவர்களை சிக்கனமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் கிடைத்துள்ளார், ஜடேஜாவின் துல்லியமும் கைகொடுக்கும். தென் ஆப்பிரிக்க புதுமுக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி கடந்த ஐபிஎல் தொடரில் 2வது சிறந்த சிக்கன விகிதம் வைத்திருந்த பவுலராவார். ஓவருக்கு 6 ரன்கள் என்ற சிக்கன விகிதம் லுங்கி இங்கிடியுடையது.
ஆனால் தொடக்க ஓவர்களை வீசும் தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் பலவீனமானவர்கள், கே.எம்.ஆசிப் கடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டும் ஆடினார். கடந்த முறை ஹர்பஜன், இம்ரான் தாஹிர் ஏமாற்றமளித்தனர், அதனால் இம்முறை ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்து கொண்டு பெஞ்சில் அமர வைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் வருவதால் தோனி, ஜாதவ், ராயுடுவின் ஆட்டங்கள் கூர்ந்து கவனிக்கப்படும். கடந்த முறை ராயுடுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன் வீரர் ஆகத் திகழ்ந்தார். 602 ரன்களை 149.75 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். ஜாதவ் கடந்த முறை காயம் காரணமாக ஒரு போட்டியைத் தவிர மீதி போட்டிகளில் ஆடவில்லை, எனவே அவரையும் பார்க்க வேண்டும்.
தோனியின் சர்வதேச கிரிக்கெட் தடுமாற்றங்கள் அவரது ஐபிஎல் ஆட்டங்களில் வெளிப்படுவதில்லை. கடந்த முறை தோனி 455 ரன்களை 150.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.
கடந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்னவெனில் சென்னையில் நடைபெறவிருந்த 6 போட்டிகள் சென்னையிலிருந்து நகர்த்தப்பட்டன.
ஆனாலும் சென்னை ரசிகர்களை திருப்தி செய்யும் விதமாக கோப்பையை வென்றது சிஎஸ்கே, இம்முறை சென்னையிலேயே போட்டிகள் நடைபெறுகின்றன, ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கிங் ஆகும் வாய்ப்பு அதிகம் என்கிறது நிலவரங்கள்.