

கடந்த ஐபிஎல் போட்டித் தொடருக்கு முன் ஆர்சிபி தன் விளம்பரங்களில் கோப்பை நமதே என்று சுய-பிரஸ்தாபம் செய்து கொண்டது எதிரிடையாக முடிந்து மிக மோசமான தொடராக அமைந்தது அந்த அணிக்கு.
இதனை விராட் கோலியே சில நாட்களுக்கு முன் ‘தொடருக்கு முன்பே அப்படியெல்லாம் பேசக்கூடாது, மற்ற அணிகளும் இருக்கின்றன’ என்று சற்று கோபத்துடனே அந்த விளம்பர உத்தியைக் கேள்விக்குட்படுத்தினார்.
அதே போல் இன்று ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கே வாய்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பிய போது,
“கடந்த முறை வென்ற கோப்பையை தக்கவைப்போம், கோப்பையை இம்முறையும் வெல்வோம் என்றெல்லாம் நாங்கள் பேச மாட்டோம். வெற்றி பெறுவது என்பது எவ்வளவு கடினம் என்பதை தெரிந்த மிக எளிமையானவர்கள் நாங்கள். இது வெற்று ஜம்பம் அல்ல, நம்முடன் விளையாடும் மற்றவர்கள் மீதும் செலுத்தும் அக்கறையாகும்.
கடந்த முறை நாங்கள் பெரிய தருணங்களை வென்றெடுத்தோம். அணிப்பண்பாட்டில் சில நடைமுறைகளைக் கையாண்டோம், பெரிய தருணங்களில் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்க அந்தந்த வீரர்களின் கையில் பொறுப்பை ஒப்படைத்தோம். ஜாதவ் ஒரு போட்டியில் மட்டும் எங்களுடன் இருந்தாலும் பிராவோவுடன் இணைந்து அந்தப் போட்டியில் வெல்ல அவர் உறுதுணையாக இருந்ததையும் கவனிக்க வேண்டும்.
கடைசியில் டுபிளெசிஸ், வாட்சன் வெற்றி பெற்று தந்தனர்.
‘தோனியை தேவைக்கேற்ப பயன்படுத்துவோம்’
தோனி கடந்த ஆண்டு பெரும்பாலும் 4ம் நிலையில் இறங்கினார். ஆனால், அவரை தேவைக்கேற்ப களமிறக்கியும் இருக்கிறோம். ஆகவே இதில் மாற்றமில்லை.` கடந்த 10 மாதங்களாக தோனி நல்ல பார்மில் இருக்கிறார். கேதார் ஜாதவ் இந்திய அணியின் பினிஷர் ரோலில் இருக்கிறார், ஆகவே இம்முறை ஜாதவ், தோனியின் சுமைகளை குறைப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.