Last Updated : 28 Mar, 2019 10:36 AM

 

Published : 28 Mar 2019 10:36 AM
Last Updated : 28 Mar 2019 10:36 AM

ரூல்ஸ் பேசிய அஸ்வினை வீழ்த்திய ரூல்ஸ்: தவிர்த்திருக்க வேண்டிய இரு தவறுகள்; ஐபிஎல் சுவாரஸ்யம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கிரிக்கெட் ஸ்பிரிட்டைக் காட்டிலும் ரூல்ஸ் முக்கியம் என்று செயல்பட்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் அதை ரூல்ஸ் முறையால்தான் வெற்றியை இழந்தார்.

கொல்கத்தாவில் நேற்று 12-வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து மோதியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்து 28 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் 17-வது ஓவரை முகமது ஷமி வீசினார்.அவரின் பந்தை கொல்கத்தா வீரர் ரஸல் எதிர்கொண்டார். ஷமி வீசிய யார்கர் பந்து கிளீன் போல்டாகியதும் மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் மகிழ்ச்சியில் திளைத்தனார். ஆனால், அது சில வினாடிகளே நீடித்தது.

லெக்திசையில் நின்றிருந்த நடுவர் ஷமி வீசிய அந்த பந்தை நோ-பால் என்று அறிவித்தார். இதனால், ரஸல் ஆட்டமிழந்து வெளியேறுவதில் இருந்து தப்பித்தார். வழக்கமாக 30-யார்ட் வட்டத்துக்குள் 4 பீல்டர்களை நிறுத்த வேண்டும். ஆனால், கேப்டன் அஸ்வின் 3 பீல்டர்களை மட்டுமே நிறுத்தியதால், ரூல்ஸ்படி, அந்த பந்தை நடுவர் நோ-பால் என்று அறிவித்தார்.

நோ-பால் அறிவிக்கும்போது, ரஸல் களத்தில் 3 ரன்களோடு இருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ரஸல் அடுத்தடுத்த பந்துகளில் பொளந்து கட்டினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை தெறிக்க விட்ட ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். கடைசி 19 பந்துகளில் ரஸலின் அதிரடியால், கொல்கத்தா அணி 56 ரன்கள் குவித்தது.

ஆட்டத்தின் திருப்பு முனையாக இந்த நோபால் அமைந்தது. ரூல்ஸ் படி நோபால் கொடுக்கப்பட்டதால், ரஸல் களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தி வெற்றியை உறுதி செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். அஸ்வினின் இந்த செயல்பாடு சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, இருவேறு கருத்துக்கள் நிலவியது.

ஆனால், தான் கிரிக்கெட்டில் உள்ள விதிப்படிதான் நடந்து கொண்டேன், அதில் தவறில்லை, கிரிக்கெட் ஸ்பிரிட் குறித்து விதியில் கூறப்படவில்லை. ஆட்டமிழக்கச் செய்யும்முன் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை  வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ரூல்ஸை சரியாக கடைபிடிக்காமல், 30 யார்ட்ஸ் வட்டத்துக்குள் குறைவான பீல்டர்களை நிறுத்தியதால், ரூல்ஸ் பேசிய அஸ்வின் ரூல்ஸால் வீழ்ந்தார்.

நோ-பாலுக்கு நானே பொறுப்பு

aswjpgசோர்வடைந்த அஸ்வின்: படம் உதவி ட்விட்டர்100 

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் இந்த போட்டியில் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனுடைய தண்டனை பெரிதாகக் கிடைத்துள்ளது. நிச்சயமாக அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக்கொள்வோம். 30யார்ட்ஸ் வட்டத்துக்குள் 4 வீரர்களை நிற்க வைக்காமல், நோ-பால் கொடுக்கப்பட்டதற்கான தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.  

நானும் அந்த இடத்தை பார்த்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் வீரர்கள் அனைவரும் சரியாக நின்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துவிட்டேன். வருண் சக்ரவர்த்தி, ஹர்டஸ் வில்ஜியோன் இருவரும் அறிமுக வீரர்கள் என்பதால் அவர்களுக்கு விதிகள் தெரியாது " எனத் தெரிவித்தார்.

அஸ்வின் செய்த தவறுகள்

இந்த ஆட்டத்தில் 2-வது ஓவரை அறிமுக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு வழங்கினார் அஸ்வின். லெக் ஸ்பின்னரான வருண் சக்ரவர்த்தி வீசிய பந்துகளை சுனில் நரேன் நொறுக்கி எடுத்து 25 ரன்கள் சேர்த்துவிட்டார். சுனில் நரேன் வேகப்பந்துவீச்சைக் காட்டிலும் சுழற்பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு விளையாடக் கூடியவர் என்பது கடந்த கால ஐபிஎல் வரலாற்றில் அறிய முடியும்.

சுழற்பந்துவீச்சில் இதுவரை 3 முறை மட்டுமே நரேன் ஆட்டமிழந்துள்ளார். அதேசமயம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இதுவரை பவர்ப்ளேயில் மட்டும் 259 ரன்களை குவித்துள்ளார் நரேன். அவரின் ஸ்டிரைக் ரேட் 127. ஆதலால், தொடக்கத்திலேயே வருண் சக்ரவர்ததிக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காமல் இருந்திருக்கலாம்.

2-வதாக, 17-வது ஓவரை ஷமி வீசிய போது, 30 யார்ட்ஸ் வட்டத்துக்குள் 4 பீல்டர்களை நிறுத்தாமல் 3 பேரை நிறுத்தியதும் தவறுதான். இதையும் கேப்டன் என்கிற முறையில் அஸ்வின் தவிர்த்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x