

இந்தியாவின் முன்னணி இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஹன் போபண்ணா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே சோம்தேவ் விலகிவிட்ட நிலையில், இப்போது போபண்ணாவும் விலகலாம் என கூறப்படுவதால் ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே டென்னிஸில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோயிருக்கிறது. ஏடிபி இரட்டையர் தரவரிசையில் கடந்த ஆண்டு 3-வது இடத்துக்கு முன்னேறிய போபண்ணா இந்த சீசனில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த சீசனின் எஞ்சிய நாட்களில் தனது தவறை திருத்திக் கொண்டு வெற்றி பெற விரும்புவதால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் டேவிஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் “நான் பிளேயிங்” கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் கூறுகையில், “போபண்ணா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் இந்திய டென்னிஸ் வீரர்கள் தங்களுடைய தனிப்பட்ட போட்டிகளில் கவனம் செலுத்துவது என முடிவெடுத்தால் நாம் அவர்களை மோசமானவர்களாக சித்தரிக்கக்கூடாது. அனைத்து வீரர்களும் நல்லவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக அவர்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி தொடர்பாக ஆனந்த் அமிர்தராஜிடம் ரோஹன் போபண்ணா புதன்கிழமை பேசினார். ஆனால் இன்னும் இறுதி முடிவெடுக்கப் படவில்லை என டென்னிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.