

இனி கணிப்புகளின் காலம். முன்னாள் வீரர்கள் பலர் 2019 இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு முன்னேறும் அணிகள் எவை என்று ஆரூடம் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
ஏ.பி.டிவில்லியர்ஸ் தன் பங்குக்கு, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று இருக்கும் அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு என்று ஆரூடம் கூற நேற்று சுனில் கவாஸ்கர், மைக்கேல் கிளார்க், மேத்யூ ஹெய்டன் தங்களது ஆரூடங்களை இந்தியா டுடே கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.
இதில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது:
நிச்சயமாக இந்தியா-இங்கிலாந்து இறுதிப் போட்டியாகத்தான் இருக்கும். விராட் கோலிக்கு சிறந்தது என்னவெனில் எம்.எஸ்.தோனி ஆலோசனை அவருக்கு கூடுதல் பலம். கோலி களத்தில் எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்கிறார், அங்கிருந்து கேப்டன்சி செய்வது எப்போதும் சாத்தியமல்ல, ஆகவே தோனி அவருக்கு உதவி வருகிறார்.
இது விராட்டுக்கு ஒரு பெரிய பிளஸ். இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங், இந்த அணியின் பந்து வீச்சுக்கு எதிராக நிச்சயமாக 390 ரன்களெல்லாம் சாத்தியமல்ல. இந்த அணி எம்.எஸ்.கே பிரசாத் மற்றும் துணை அணித்தேர்வாளர்களினால் நன்றாக வார்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
இவர் இந்தியர் என்பதால் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கோப்பையை வெல்லும் என்றுதானே கூற முடியும்? அதே போல் மேத்யூ ஹெய்டன், மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியர்கள் என்பதால் 3வது சாத்தியமாக ஆஸ்திரேலியாவைச் சேர்த்துள்ளனர்.
மே.இ.தீவுகள் என்ற ஒரு புத்தெழுச்சி அணி உள்ளதை ஒருவரும் கண்டு கொண்டதாகவோ, ஆப்கான் அணி எந்த ஒரு ‘ஆபீசர்கள்’ அணியையும் வீழ்த்தும் என்பதையோ இந்த ஆரூடக்காரர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை.