Last Updated : 25 Mar, 2019 03:12 PM

 

Published : 25 Mar 2019 03:12 PM
Last Updated : 25 Mar 2019 03:12 PM

கோலியின் தூக்கத்தைக் கெடுத்த பும்ராவின் காயம்:  மும்பை இந்தியன்ஸ் என்ன கூறுகிறது?

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி இன்னிங்சின் கடைசி பந்தில் தோள்பட்டைக் காயமடைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ‘பகீர்’ அளித்த பும்ராவின் காயம் ஒன்றுமில்லை வெறும்  தசைப்பிடிப்புத்தான் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பொதுவாகவே இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐ முக்கியமான வீரர்களின் காயங்கள் பற்றிய தகவல்களில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்காது என்பது தெரிந்ததே. இப்போது பும்ராவின் காயத்தை வைத்து என்னென்னவெல்லாம் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

நேற்று பும்ரா பேட் செய்யவில்லை என்பதும் உலகக்கோப்பையில் பும்ரா ஆடுவாரா என்ற சந்தேகங்களைக் கிளப்பியது.  ஆனால் இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பேட் செய்ய அனுப்பப்படவில்லை என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

ஆனால் இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போது, ‘ஒண்ணும் இல்லையே... ஹோட்டலுக்கு திரும்பி வரும்போதே சரியாகி விட்டதே’ என்று கூறியதாகத் தகவல்.

 

“அவர் முழு உடற்தகுதியுடன் தான் இருக்கிறார், தோள்பட்டைத் தசைப் பிடிப்புதானே வேறு ஒன்றும் சீரியசாக இல்லை. பும்ரா டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாவார், அதனால் பேட்டிங்கில் முன்னெச்சரிக்கை நிமித்தமாக இறக்கவில்லை” என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாகத் தகவல்.

 

பும்ரா காயம் என்றவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கவலையடைந்ததாகவும்  இந்திய அணியின் உடற்கூறு நிபுணர் பாட்ரிக் ஃபர்ஹாத் உடனேயே மும்பை இந்தியன்ஸ் ஃபிசியோவைத் தொடர்பு கொண்டு பும்ராவின் காயம் குறித்து கேட்டறிந்தார், அடுத்த போட்டியில் பும்ரா ஆடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

பும்ராவை நேற்று ரிஷப் பந்த் புரட்டி எடுத்தார், ஆனாலும் கடைசி பந்து ஒரு சிறந்த யார்க்கர், ரிஷப் மட்டையின் பட்ட பந்து மிட் ஆன் நோக்கி வந்தது.  பும்ரா டைவ் அடித்து பீல்ட் செய்தார், ஆனால் இதில் காயமடைந்த பும்ரா வலியில் துடித்தார். அப்போது ஃபிசியோ நிதின் படேல் பும்ராவை பெவிலியன் அழைத்துச் சென்றார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி முடிந்தவுடன் விராட் கோலி அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போது, “ஐபிஎல் கிரிக்கெட்டை எஞ்ஜாய் செய்யுங்கள், திறமையை வெளிப்படுத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டாம், அதாவது நான் இதைச் செய்ய வேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று பிரஷர் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.  வீரர்கள் ஸ்மார்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள், நம் பிசியோவுடன் தொடர்பிலிருங்கள்.

 

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு கடமையுடன் இருக்க வேண்டாம் என்று அர்த்தமல்ல, ஸ்மார்ட்டாக இருப்பது அவசியம் யாரையும் வலுக்கட்டாயமாக எதையும் செய்ய வைக்க முடியாது.  யாரும் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாமல் போக யாரும் விரும்ப மாட்டார்கள், அணியின் சமச்சீர் நிலை முக்கியம்” என்று கூறியிருந்தார்.

 

ஆகவேதான் பும்ரா காயம் என்றவுடன் கோலியின் இரவு உறக்கம் பறிபோயிருக்கும் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x