‘போலீஸ் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பர்...’; சூதாட்டக் கும்பல்கள்  ‘குஷி’ - ஐபிஎல் தொடரை அச்சுறுத்தும் ‘பெட்டிங்’ வலைப்பின்னல்

‘போலீஸ் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பர்...’; சூதாட்டக் கும்பல்கள்  ‘குஷி’ - ஐபிஎல் தொடரை அச்சுறுத்தும் ‘பெட்டிங்’ வலைப்பின்னல்
Updated on
2 min read

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்கம் திருவிழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் அனைவரும் தங்கள் ஹீரோக்களின் ‘பேட்டிங்கை’ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் பேட்டிங்கை விட பெட்டிங் கம்பெனிகள் படுகுஷியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தேர்தல் நேரம் என்பதால் போலீஸ் படை முழுதும் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் என்பதால் தங்களை கண்காணிக்க முடியாது என்று ‘பெட்டிங்’ கும்பல்கள் குஷியாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு முந்தைய ரெக்கார்டுகளைப் பார்க்கும் போது ஐபிஎல் சூதாட்டம் பெரிய அளவில் நடந்த இடம் விசாகப்பட்டிணம் என்று தெரிகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் விசாகப்பட்டிண நகர சிறப்புப் போலீஸ் படை 19 புக்கிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சூதாட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உதவும் லாப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் பெரிய அளவில் போலீஸார் கைப்பற்றியிருந்தனர். இதில் உயர் தொழில்நுட்ப ஒருங்கிணைந்த அழைப்பு ஏற்பு உபகரணங்களும், லைன் மொபைல் போன்களும் அடங்கும்.

கடைசியாக இந்தியாவில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது கூட நகர அதிரடிப்படையினர் குத்லவனிபலெம் என்ற ஊரில் உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 பேர் கொண்ட பெட்டிங் கும்பலை கைது செய்தனர்.

லோக்சபா தேர்தல்கள் ஆந்திராவில் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுவதால் பெரிய அளவில் போலீஸ் படை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கணக்கில் வராத பணப்புழக்கம், அடையாள சோதனை, வாகன சோதனை  என்று போலீஸ் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு சூதாட்டக் கும்பல்கள் தப்புக் கணக்குப் போட்டு பெரிய அளவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் போலீஸுக்கு இது தெரிந்துள்ளது, அதனால்தான் புக்கிகள் இம்முறை புதிய வழிமுறைகளுடன் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.  பெட்டிங் கும்பல்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளிலிருந்துதன தங்கள் கைவரிசையைக் காட்டி வருவதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

“கிழக்குக் கோதாவரி, மேற்கு கோதாவரி, பிரகாசம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் சூதாட்ட கும்பல்கள் விசாகப்பட்டிணத்தில்தான் அபார்ட்மெண்ட்களில்  குடிபுகுகின்றனர், இங்கிருந்துதான் சூதாட்டத்தை பெரிய அளவில் நடத்துகின்றனர்” என்று விசாகப்பட்டிணம் முன்னாள் போலீஸ் உயரதிகாரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ‘பெட்டிங்குகள்’

கடந்த ஐபிஎல் தொடரின் போது கூட பெரிய அளவில் பெட்டிங் நடைபெற்றது. கிர்லம்புடி லே அவுட்டில் ஆடம்பர அபார்ட்மெண்ட்டில் சூதாட்டம் நடத்திய பெரிய கும்பல் ஒன்று பிடிபட்டது என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

முதலில் சிறிய தொகையில் நடைபெற்று வந்த ஐபிஎல் சூதாட்டங்கள் தற்போது கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் பெட்டிங் இண்டஸ்ட்ரியாக மாறியுள்ளது என்று கூறும் போலீஸ் அதிகாரிகள்., தேர்தல் பணியில் நெருக்கடியாகப் பணியாற்றினாலும் சூதாட்ட கும்பலையும் இம்முறை சும்மா விட மாட்டோம் என்று சூளுரைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in