Published : 10 Mar 2019 08:15 AM
Last Updated : 10 Mar 2019 08:15 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சிட்டி: கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை நேரு விளையாட்ட ரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்தில் மினர்வா பஞ்சாப் அணி தனது முதல் கோலை அடித்தது. ப்ரீகிக்கில் ஜூவான் பாராஸோ உதைத்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் யாரும் மார்க் செய்யப்படாத நிலையில் ரோலன்ட் பிலாலா துள்ளியவாறு தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் மினர்வா பஞ்சாப் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சென்னை சிட்டி அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்த போதிலும் முதல் பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

2-வது பாதி ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட்டார்கள். 56-வது நிமிடத்தில் மினர்வா பஞ்சாப் அணி வீரர் ஆகாஷ்தீப், பந்தை கையால் தடுத்ததால் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை ஜாவியர் பெட்ரோ மான்ஸி கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது. பெட்ரோ மான்ஸி இந்தத் தொடரில் அடித்த 21-வது கோலாக இது அமைந்தது.

69-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி தனது 2-வது கோலை அடித்தது. கார்னரில் இருந்து சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் உதைத்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் எதிரணி வீரர்களால் மார்க் செய்யப்படாமல் இருந்த கவுரவ் போரா கச்சிதமாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 2-1 என முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் சென்னை சிட்டி அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து உதைத்த பந்தை கவுரவ் போரா கோலாக மாற்ற சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சென்னை சிட்டி அணிக்கு இது 13-வது வெற்றியாக அமைந்தது. 20 ஆட்டங்களில் விளையாடிய சென்னை சிட்டி அணி 4 டிரா, 3 தோல்விகளுடன் 43 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. ஈஸ்ட் பெங்கால் அணி தனது கடைசி ஆட்டத்தில் கோகுலம் கேரளா அணியை 2-1 என்ற

கணக்கில் வீழ்த்தி 42 புள்ளிகளு டன் 2-வது இடம் பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x