

3 ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா இவர்களை ஒப்பிடும்போது கேப்டன்சியில் விராட் கோலி இன்னும் பலகாத தூரம் செல்ல வேண்டும் என்று கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
2013-ல் ஐபிஎல் ஆர்சிபி கேப்டன்சியை எடுத்துக் கொண்ட விராட் கோலி தலைமையில் இருமுறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கடைசி 2 சீசன்களில் 8 மற்றும் 6ம் இடங்களில் முடிந்தது.
இந்நிலையில் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட கோலி வெல்லவில்லை என்றாலும் ஆர்சிபி அவரை கேப்டன்சியிலிருந்து தூக்காமல் வைத்திருப்பதற்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று கம்பீர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக கம்பீர் கூறியிருப்பதாவது:
கோலி கேப்டன்சியில் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். அவர் உத்தி ரீதியாக சரியான கேட்பன் என்று நான் கருதவில்லை. இவர் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆகவே ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை அவர் சிறந்த கேப்டனாக முடியாது. 3 முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன்கள் இருக்கிறார்கள். தோனி, ரோஹித் சர்மா. ஆகவே கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.
ஆகவே இந்த நிலையில் ரோஹித் சர்மாவுடன், தோனியுடன் கோலியை ஒப்பிட முடியாது, கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபி கேப்டனாக இருந்து வருகிறார், ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை, எனவே ஆர்சிபி இவரைக் கேப்டன்சியிலிருந்து தூக்காமல் வைத்திருக்கிறதே இது அவரது அதிர்ஷ்டம். ஆர்சிபி நிர்வாகத்துக்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
ஒரு தொடரில் இவ்வளவு ஆண்டுகள் ஒரு அணியின் கேப்டனாக இருந்து கொண்டு கோப்பையை வெல்லாமல் இருக்கும் கேப்டன்கள் அரிதே.
என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கம்பீர் விளாசித்தள்ளினார்.
இதுவரை ஆர்சிபி அணியை 96 போட்டிகளில் வழிநடத்திய கோலி 44 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.