

ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி ஹாரிஸ் சொஹைல் சதத்துடன் 280/5 என்று முடிய தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச்சின் 12வது ஒருநாள் சதம் மற்றும் ஷான் மார்ஷின் 91 ரன்கள் மூலம் 281/2 என்று அபார வெற்றி பெற்றது.
பிஞ்ச் (116), ஷான் மார்ஷ் (91) இணைந்து 2வது விக்கெட்டுக்காக 172 ரன்களைச் சேர்த்து பாகிஸ்தானின் வெற்றிக்கதவை மூடினர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிய உமர் அக்மல் 48 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் தரப்பில் ஒரு பாசிட்டிவ் ஆன அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
சொஹைல், அக்மல் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 98 ரன்களைச் சேர்த்தனர். அதிரடி வீரர் ஃபாஹிம் அஷரப்பின் 28 ரன்கள், இமாத் வாசிமின் 13 பந்து 28 நாட் அவுட் மூலம் பாகிஸ்தான் கடைசி 5 ஓவர்களில் 55 ரன்கள் விளாசியது. சொஹைல் 50வது ஓவரில்தான் சதம் எடுத்தார்.
இந்தியத் தொடரின் அபார பார்மை பாகிஸ்தானுக்கும் கொண்டு சென்ற நேதன் லயன் (1/38), ஆடம் ஸாம்ப்பா (0/44) மிகச்சிக்கனமாக வீசி பாகிஸ்தானைக் கட்டிப்போட்டனர். நேதன் கூல்டர் நைல் உமர் அக்மல் விக்கெட்டையும், அறிமுக வீரர் ஷான் மசூத் (40) விக்கெட்டையும் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய மொகமது அப்பாஸை இந்தப் போட்டியில் அறிமுகம் செய்தது. அவர் 10 ஒவர்கள் 44 ரன்கள் என்று சிக்கனம் காட்டி சத நாயகன் ஏரோன் பிஞ்சை வீழ்த்தினார். ஏரோன் பிஞ்ச் (116, 135 பந்து, 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 235 என்று வெற்றிக்கு அருகில் வந்திருந்தது.
பிறகு மார்ஷ் (91 நாட் அவுட், 102 பந்துகள் 4 பவுண்டரி, 2 சிக்ஸ்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் (30) ஆகியோர் பாதுகாப்பாக வெற்றிக்கு இட்டுச் சென்றனர். சரியாக 49வது ஒவரில் ஆஸி. வெற்றியை ஈட்டியது.
முன்னதாக உஸ்மான் கவாஜா (24), பாஹிம் அஷ்ரப் பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து 12வது ஓவரில் வெளியேறினார். நாளை ஷார்ஜாவில் 2வது போட்டி, அபுதாபியில் புதனன்று 3வது போட்டி, பிறகு துபாயில் 4 மற்றும் 5வது போட்டி முறையே வெள்ளி, மற்றும் ஞாயிறில் நடைபெறுகிறது.