விதிப்படி சரிதான் - ஹர்ஷா போக்ளே; இழிவானது - ஷேன் வார்ன்: பட்லர் ரன் அவுட் பற்றி ட்விட்டரில் உணர்ச்சி மிகு மோதல்

விதிப்படி சரிதான் - ஹர்ஷா போக்ளே; இழிவானது - ஷேன் வார்ன்: பட்லர் ரன் அவுட் பற்றி ட்விட்டரில் உணர்ச்சி மிகு மோதல்
Updated on
2 min read

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லரை ‘மன்கடட்’ செய்தார் அஸ்வின். இது விதிப்படி சரிதான் என்று ஹர்ஷா போக்ளேவும், கிரிக்கெட் ஸ்பிரிட் படி மிக இழிவான செயல் என்றும் ஷேன் வார்னும், ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் ஒரு நட்பு ரீதியான பொழுது போக்கு கிரிக்கெட், அதில் போய் ஒரு வீரரை இப்படி அவுட் செய்வது அஸ்வினின் இயலாமையை பறைசாற்றுகிறது, இன்று அஸ்வின் சார்பாக கொடிபிடிப்பவர்கள் நாளை ஒரு அயல்நாட்டு வீரர் விராட் கோலிக்கோ, தோனிக்கோ இதைச் செய்தால் ஆஹா ரூல் படிதான் செய்தார் என்று கமெண்ட் போடுவார்களா என்பதே நம் கேள்வி.

மேலும் ஆட்ட விதிகள் என்பது ஒரு வழிகாட்டிதான் கேப்டன்களும் வீரர்களும் கிரிக்கெட் ஸ்பிரிட் என்கிற ஆட்ட உணர்வுடன் செயல்பட்டு விதிமுறைகளை ஆட்ட நேயத்துடனும் சக வீரருக்கான மரியாதையுடனும் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் எந்த ஒரு ஆட்டத்தின் ஆன்மாவும். ஆகவே விதிப்படி சரிதான், அதுதான் இதுதான் என்று இந்தச் செயலை செய்தவர் இந்தியர், தமிழர் என்பதால் தூக்கிப் பிடிக்கும் போக்கு சரியல்ல என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹர்ஷா போக்ளே, ஷேன் வார்ன் ட்விட்டரில் மேற்கொண்ட வாக்குவாதம் வருமாறு:

முதலில் ஷேன் வார்ன் தன் ட்விட்டரில், “ஒரு கேப்டனாக, ஒரு நபராக அஸ்வின் மீது கடும் ஏமாற்றம் அடைந்தேன். அனைத்து கேப்டன்களும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆட்ட உணர்வுடன் ஆடுவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.  அஸ்வின் பந்தை முழுதும் வீசுவதற்கான எந்த ஒரு நோக்கத்தையும் காட்டவில்லை. ஆகவேதான் அதை டெட் பால் என்று அறிவித்திருக்க வேண்டும். பிசிசிஐ கவனத்துக்கு விட்டு விடுகிறேன், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இது அழகல்ல” என்று ட்வீட் செய்ய

அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹர்ஷா போக்ளே, ”விதிமுறைகளின் படி எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. இதே போல் விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்யும் போது எச்சரிக்கை விடுப்பாரா” என்று இந்தச் செயலுக்கு வால்பிடிக்க, மீண்டும் ஷேன் வார்ன், “ஹர்ஷா முக்கியமான விஷயத்தை நீங்கள் கோட்டை விட்டுள்ளீர்கள். உங்களிடமும் நான் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆட்ட உணர்வை எப்போதும் மதிப்பவர் நீங்கள், இந்த அஸ்வின் நடத்தையை ஆதரிக்கிறீர்களா? அஸ்வின் செய்தது மிக இழிவான செயல். பிசிசிஐ நிச்சயம் இதனை ஆதரிக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் அஸ்வினை விமர்சித்து, “அஸ்வின் இந்த கீழான செயலுக்காகத்தான் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவீர்கள் அஸ்வின், சாரி” என்றும் ட்வீட் செய்துள்ளார் ஷேன் வார்ன்.

உடனே ஹர்ஷா போக்ளே, மேலும் சப்பைக் கட்டும்விதமாக, “நேற்று நல்ல ஐபிஎல் போட்டி, கிறிஸ் கெய்ல், ஜோஸ் பட்லர் நன்றாக ஆடினர், அஸ்வின், ஆர்ச்சர், சர்பராச் கான்  நன்றாக ஆடினர்” என்று ட்வீட் செய்ய.

ஷேன் வார்ன் மீண்டும் பதிலடி கொடுக்கையில், “இதையே ஒரு சர்வதேச வீரர் செய்திருந்தால் ஹர்ஷா நீங்கள் அவருக்கு ஆணியடித்திருப்பீர்கள். பாரபட்சமாகப் பேசாதீர்கள், நீங்கள் நீங்களாக இருங்கள். யார் யாருக்கு இதைச் செய்தாலும் அது ஆட்டத்துக்கான தர்மசங்கடம்தான். அதுவும் ஒரு கேட்பன் செய்வது மிக மிக இழிவானது” என்று சாடினார்.

மேலும், “எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அணுகுமுறை ஒழிய வேண்டும். இதனை ஆதரிக்கும் முன்னாள் வீரர்களைக் கேட்கிறேன், நீங்கள் ஏன் இப்படிச் செயவில்லை? ஏனெனில் இது அசிங்கம் என்று உங்களுக்குத் தெரிந்ததால்தானே? இதையே பென் ஸ்டோக்ஸ் செய்திருந்தால் ஓகேவா? எனக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது அஸ்வினிடன் ஒரு அபாரத்திறமையும் நேர்மையும் இருக்கிறது என்று நினைத்திருந்தேன்.  கிங்ஸ் லெவன் அணி நிறைய ஆதரவாளர்களை இழந்து விட்டது. குறிப்பக இளம் ரசிகர்களை இழந்து விட்டது. பிசிசிஐ ஏதாவது செய்யும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஷேன் வார்ன் கொதித்துப் போய் ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in