Published : 31 Mar 2019 12:59 PM
Last Updated : 31 Mar 2019 12:59 PM

ஜென்டில்மேன் கேம்: மன்கட் அவுட் குறித்து அஸ்வினுக்கு பாடம் எடுத்த குர்னல் பாண்டியா

மொஹாலியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வாலை 'மன்கட் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் எச்சரிக்கையுடன் அனுப்பி மும்பை இந்தியன்ஸ் வீரர் குர்னல் பாண்டியா ஜென்டில்மேனாக ஒளிர்ந்தார்  

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணயின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எச்சரிக்கை செய்யாமல் ஜோஸ் பட்லரை 'மன்கட் அவுட்' செய்தது சர்வதேச கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஐசிசி விதிப்படி சரியென்றாலும், 'ஸ்பிரிட் ஆப் தி கேமை' மதிக்கவில்லை என்று அஸ்வினை பல்வேறு வீரர்களும் சாடினர்.

ஆனால், குர்னல் பாண்டியா பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வாலை 'மன்கட்' செய்யாமல் எச்சரிக்கை செய்து 'ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டை' மதித்தது சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

மொஹாலியில் நேற்று நடந்த  ஐபிஎல் டி20 போட்டியில் 9-வது லீக் ஆட்டத்தில் அஸ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்களை துரத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்த போட்டியில் 10 ஓவரை மும்பை அணி வீரர் குர்னல் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தை கே.எல்.ராகுல் எதிர்கொண்டார். நான்-ஸ்டிரைக்கர் இடத்தில் மயங்க் அகர்வால் 19 ரன்களுடன் நின்றிருந்தார். குர்னல் பாண்டியா 4-வது பந்தை வீச வந்தபோது, கையில் இருந்து பந்துவீசும் முன், மயங்க்  அகர்வால் கிரீஸை விட்டு வெளியே ரன் ஓட வந்துவிட்டார்.

இதைப் பார்த்த குர்னல் பாண்டியா பந்துவீசாமல் மயங்க் அகர்வாலை கிரீஸுக்குள் நிற்குமாறு செய்கையால் எச்சரிக்கை செய்து சென்றார். குர்னல் பாண்டியா நினைத்திருந்தால் மயங்க் அகர்வாலை மன்கட் அவுட் செய்திருக்க முடியும். ஐசிசி விதியும் குர்னல் பாண்டியா மன்கட் அவுட் செய்யும் உரிமை இருப்பதை அனுமதிக்கிறது.

பேட்ஸேமேனை மன்கட் அவுட் செய்யும் முன் எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், 'ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டை' மதித்து குர்னல் பாண்டியா மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்யாதது பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகிறது.

அந்த வாய்ப்பில் தப்பித்த மயங்க் அகர்வால், 21 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் கிங்ஸ்லெவன் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. மயங்க அகர்வால் ஆட்டமிழந்து சென்றபோது அணியின் இலக்கு 39 பந்துகளுக்கு 60 ரன்கள் என்று இருந்தது.

குர்னல் பாண்டியா ஸ்பிர்ட் ஆப் தி கேமை மதித்து, அஸ்வின் கேப்டனாக இருக்கும் அணி வீரர் ஒருவரை மன்காட் முறையில் அவுட்ஆக்காமல் விட்டது அஸ்வினுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. நாங்கள் மன்கட் அவுட் செய்யமாட்டோம் என்பதை குறிப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் ட்விட்டரில் பதிவு செய்திருந்தது.

அதேநேரத்தில் குர்னல் பாண்டியாவின் செயலை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் வான்  பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில் " குர்னல் பாண்டியா உங்கள் செயலை மதிக்கிறேன். மன்கட் விக்கெட்டை எவ்வாறு அணுகினீர்கள் என்பதை அறிந்தேன். பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்யும் மரபை காப்பாற்றிவிட்டீர்கள்" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x