Published : 03 Mar 2019 01:28 PM
Last Updated : 03 Mar 2019 01:28 PM

வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸி: சர்க்கார், மகமதுல்லா சதம் வீண்

சவுமியா சர்க்கார், மகமதுல்லா சதம் அடித்த போதிலும், வங்கதேசம் அணியை முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

சிறப்பாகப் பந்து வீசிய டிரன்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் வீழத்தினார். ஆட்டநாயகன் விருதை கானே வில்லியம்ஸன் பெற்றார்.

மில்டனில் வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி, 59.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்து அணியில் ராவல்,லாதம் ஆகியோர் சதமும், கேப்டன் வில்லியம்ஸன் இரட்டை சதமும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 715 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

481 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.  3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில், 174 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்திருந்தது. சவுமியா சர்க்கார் 39 ரன்களிலும், மகமதுல்லா 15 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். நியூஸிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஆடிய இருவரும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

சவுமியா சர்க்கார் 97 பந்துகளில் சதத்தையும், மகமதுல்லா 183 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தனர். சர்வதேச டெஸ்ட் அரங்கில் மகமதுல்லா அடிக்கும் முதலாவது சதம் இதுவாகும்.

5-வது விக்கெட்டுக்கு இருவரும் 235 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சவுமியா சர்க்கார் 149 ரன்னில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்த சிறிது நேரத்தில் மகமதுல்லா 143 ரன்களில் சவுதியிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த அடுத்த 18 ஓவர்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளும் விரைவாக இழந்து தோல்வி அடைந்தது. கடைசி வரிசையில் இருக்கும், லிட்டன் தாஸ் (1), மெஹதி ஹசன்(1), அபு ஜயத்(3), இப்தாத் ஹூசைன் டக்அவுட் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

முடிவில் 103 ஓவர்களில் 429 ரன்களுக்கு வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்களில் தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுதி 3 விக்கெட்டுகளையும், வாக்னர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x