Published : 13 Mar 2019 06:35 PM
Last Updated : 13 Mar 2019 06:35 PM

5வது ஒருநாள் போட்டி: கவாஜாவின் அபார சதத்துடன் ஆஸ்திரேலியா 272 ரன்கள்

டெல்லியில் நடைபெறும் வாழ்வா சாவா கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க அந்த அணி 175/1 என்ற நிலையிலிருந்து 50 ஒவர்களில் 272 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்று இந்திய அணியினால் மட்டுப்படுத்தப்பட்டது.

 

உஸ்மான் கவாஜா தொடரின் 2வது சதத்தை எடுத்து ஆஸ்திரேலிய அணியில் உலகக்கோப்பை வாய்ப்பை தக்க வைத்துள்ளார். டெல்லி பிட்ச் தாழ்வாக மந்தமாக உள்ளது. இது இந்தியா இலக்கை விரட்டும் போது பந்து பழசானவுடன் பல கடினங்களைக் கொடுக்கும் குறிப்பாக நேதன் லயன், கோலியை பதம் பார்க்கும் ஆடம் ஸாம்பா ஆகியோர் பந்து வீச வருபோது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

33வது ஓவரில் சதம் அடித்தவுடன் கவாஜா ஆட்டமிழக்க ஜஸ்பிரித் பும்ரா ஒருமுனையில் கிடுக்கிப் பிடி போட மற்றவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த அடுத்த 54 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து தடுமாற்றம் கண்டது.

 

புவனேஷ்வர் குமார் 10 ஒவர்களில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் இந்தியா தரப்பில் கைப்பற்றினர்.

 

கடந்த போட்டியின் அதிரடி பினிஷிங் நாயகன் ஆஷ்டன் டர்னர் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் ஆடிவந்த போது குல்தீப் யாதவ்வை தாக்க நினைத்து ஜடேஜாவின் அற்புத கேட்சுக்கு 20 ரன்களில் வெளியேறினார், மற்றபடி குல்தீப் பந்து வீச்சை பெரும்பாலும் கவாஜா பிரமாதமாக கணித்து ஆட, ஹேண்ட்ஸ்கம்பும் அவரிடம் விக்கெட்டை கொடுக்கவில்லை, இதனால் குல்தீப் 10 ஒவர்கள் 74 ரன்கள் கொடுத்து வீணானார். இந்தியாவின் அயல்நாட்டு நம்பர் 1 பவுலர் உள்நாட்டில் 2வது முறையாகச் சொதப்புகிறார்.

 

மற்றொரு வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸும் 20 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமாரின் வராத, எழும்பாத பந்தை கட் ஆட முயன்று பந்தை வங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார், டர்னர், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகள் மிக முக்கியமானவை.  ஆனால் கடைசியில் பேட் கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் இணைந்து 16 பந்துகளில் 34 ரன்களைச் சேர்த்தனர், இதில்தான் பும்ராவின் ஒரே ஒவரில் 19 ரன்கள் அந்த ஆத்திர , அனாவசிய ஓவர் த்ரோவையும் சேர்த்து.

 

இந்திய அணி சாஹலை ஒதுக்கி விட்டது, கடந்த போட்டியில் இவரை கொன்று எடுத்து விட்டனர், இதனால் 80 ரன்களை வாரி வழங்கினார், அதே போல் கே.எல்.ராகுலையும் அணியிலிருந்து தூக்கி விட்டனர். நல்லவேளையாக அரைக்கை பவுலர் ஜாதவ் ஒரு ஓவைல் 8 கொடுத்தவுடனேயே கட் செய்யப்பட்டார்.

 

புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி தொடக்க ஓவர்களில் ஸ்விங் எதிர்பார்த்து தோற்று ட்ரைவ் லெந்தில் வீசி கவாஜா, பிஞ்சின் அருமையான தொடக்கத்துக்குக் காரணமாகினர். இருவரும் 76 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது பிஞ்ச் ஜடேஜாவின் அருமையான ஸ்பின் பந்தில் பவுல்டு ஆனார்.  ஹேண்ட்ஸ்கம்ப், கவாஜா மிக அருமையாக ஆடினர் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தனர். அவ்வப்போது பவுண்டரியும் அடித்தனர்.

 

175/1 என்ற நிலையில் 17 ஓவர்கள் மீதமிருந்தன அப்போது கவாஜா கோலியிடம் கேட்ச் ஆகி 100 ரன்களில் வெளியேறினார்.  கிளென் மேக்ஸ்வெல் ஜடேஜாவை கவருக்கு மேல் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆனார். ஹேண்ட்ஸ்கம்ப் ஆஸி. தொடர் போலவே ஷமியின் அருமையான எழும்பிய பந்தில் கேட்ச் ஆனார்.  ஸ்டாய்னிஸ் 16 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. கடைசியில் புவனேஷ்வர் குமார் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் 34 ரன்களை 8வது விக்கெட்டுகாகச் சேர்க்க ஸ்கோர் 272 ரன்கள் ஆனது.

 

இலக்கை விரட்டி வரும் இந்திய அணி தவண் விக்கெட்டை இழந்து 9 ஒவர்களில் 10வது ஓவர் முடிவில் 43/1 என்று உள்ளது, கேப்டன் விராட் கோலி, ரோஹித்சர்மா ஆடிவருகின்றனர். விஜய் சங்கர், ஜாதவ், ரிஷப் பந்த், ஜடேஜா ஆகிய பேட்ஸ்மென்கள் வரிசையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x