

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 தரவரிசைப் பட்டியலில், பந்துவீச்சு, பேட்டிங் இரு பிரிவிலும் இரு இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 726 புள்ளிகளுடன் 5-ம் இடம் பெற்றுள்ளார். முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே ஒரு இந்திய வீரர் இவர் மட்டுமே.
முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், 2-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் கோலின் முன்ரோ உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் முறையே 3 மற்றும் 4-வது இடங்களில் உள்ளனர்.
6-வது இடம் முதல் 10 இடங்கள் வரை முறையே, ஹஸ்ரத்துல்லா(ஆப்கன்), ஷார்ட் (ஆஸி,), லூயிஸ்(மே.இ.தீவுகள்), பக்கர் ஜமான்(பாக்.), அலெக்ஸ் ஹேல்ஸ்(இங்கி.) ஆகியோர் உள்ளனர். ரோஹித் சர்மா 11-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் 117 ரன்கள் குவித்ததால், 55 -வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் 87 ரன்கள் குவித்ததன் மூலம் 56 இடங்கள் உயர்ந்து, 84-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சு தரவரிசையிலும் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷாதாப் கான், இங்கிலாந்து வீர்ர. அதில் ரஷித், பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் ஆகியோர் அடுத்த 3 இடங்களில் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எதிரான தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் அதில் ரஷித் 2 இடங்கள் முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல இங்கிலாந்து வீர்ர டேவிட் வில்லேயும் தரவரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மே.இ.தீவுகள் வீரர் நிகோலஸ் பூரண் 18 இடங்கள் முன்னேறி 79-வது இடத்தைப் பெற்றுள்ளார், இடதுகை ஸ்பின்னர் பேபியன் ஆலன் 33-வது இடங்கள் முன்னேறி, 72-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
அடுத்ததாக இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் இலங்கையை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தினால், 120 புள்ளிகளுடன் முன் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறும். அதேசமயம் இலங்கை 3-0 என்ற கணக்கில் வென்றால், 7 புள்ளிகள் பெற்று 93 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறும்.