Last Updated : 10 Mar, 2019 06:25 PM

 

Published : 10 Mar 2019 06:25 PM
Last Updated : 10 Mar 2019 06:25 PM

மொஹாலியில் தாண்டவமாடிய தவண்: ஆஸி.க்கு 359 ரன்கள் இலக்கு

மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வந்துள்ள தவணின் அதிரடி சதம், ரோஹித் சர்மாவின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் மொஹாலியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது ஒரு நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி  358 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அணி 359 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்த ஆயத்தமாகியுள்ளது.

இங்கிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவணின் பேட்டிங் ஃபார்ம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்து வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப்பின் தவண் சதம் அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டிகளிலும் சொல்லும்படியாக  ஆடவில்லை. நியூசிலாந்து தொடரில் மட்டும் இரு அரைசதங்கள் அடித்திருந்திருந்தார்.

உலகக்கோப்பைப் போட்டி நெருங்கும் வேளையில் தொடக்க வீரரான தவணின் ஃபார்ம் கவலையை ஏற்படுத்தி வந்தது. கே.எல்.ராகுலை பயன்படுத்தலாமா, ரிஷப் பந்த்தை பயன்படுத்தலாமா என்றெல்லாம்  தேர்வுக்குழுவால் யோசிக்கப்பட்டது. அனைத்துக் கேள்விகளுக்கும் தனது பேட்டிங்கால் இன்று தவண் பதில் அளித்துள்ளார்.

ஷிகர் தவண் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 16-வது சதம் இதுவாகும். இவர் அடித்த 10 சதங்கள் 100 பந்துகளுக்குள் உள்ளாகவே அடித்துள்ளார். அதில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆட்டத்தில் ஷிகர் தவண் 97 பந்துகளில் சதம் அடித்து 143 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவணின் ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன் இதுவாகும்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் சேர்த்த தொடக்க வீரர்கலில்  சச்சின், சேவாக் கூட்டணி 4 ஆயிரத்து 387 ரன்கள் சேர்த்து 2-வது இடத்தில் இருந்து வந்தனர். ஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட்டணி, அதிக ரன்கள் சேர்த்து சேவாக், சச்சின் சாதனையை முறியடித்துவிட்டனர். ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடி  ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்து 389 ரன்கள் சேர்த்து சச்சின், சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளினார்கள்.

இவருக்கு உறுதுணையாக ஆடிய ரோஹித் சர்மா 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் தொடக்கத்தில் அமைத்துக்கொடுத்த வலுவான அடித்தளத்தை நடுவரிசை வீரர்கள் பயன்படுத்தவில்லை என்கிற போதிலும், கடைசிவரிசையில் வந்த வீரர்கள் பயன்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.  அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்களா 218 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். தோனி 2-வது இடத்துக்கு பின்தங்கினார். மேலும், உள்ளூர் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்.

 கடைசி 20 ரன்களைச் சேர்ப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளையும் இழந்து அவசரப்பட்டது.  பதற்றமடையாமல் ரிஷப் பந்த்,கேதார் ஜாதவ், புவனேஷ் குமார், விஜய் சங்கர் பேட் செய்திருந்தால் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் இந்த ஆட்டத்திலும் நிலைத்து ஆடாமல் சொதப்பினார்கள். ராயுடுவுக்கு பதிலாக ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தும் அதை அவர் பயன்படுத்தவில்லை.

 டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி சார்பில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ஷமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக யஜூவேந்திர சாஹலும், அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட்டார்.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினர். தவண் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்க, ரோஹித் நிதானம் காட்டினார். ஆனால், சிறிது நேரத்துக்கு பின், ரோஹித் சர்மா தனது இயல்பு ஆட்டத்துக்கு திரும்பி, வெளுத்து வாங்கினார். இருவரும் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டனர்.

இதனால், 9 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களையும், 17.2 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது. 25 ஓவர்களில் 150 ரன்களை தொட்டது.

காட்டடி அடித்த தவண் 44 பந்துகளிலும், ரோஹித் சர்மா 61 பந்துகளிலும் அரைசதம் எட்டினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை தவணும், ரோஹித் சர்மாவும் துவம்சம் செய்ததால், ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய தவண் 97 பந்துகளில் தனது சர்வதேச ஒருநாள் போட்டியில் 16-வது சதத்தை நிறைவு செய்தார். ரோஹித் சர்மாவும் சதத்தை நோக்கி முன்னேறி வந்தார். ஆனால், ரிச்சார்ட்ஷன் பந்துவீச்சில் துரதிர்ஷ்டமாக 95 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 193 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ராகுல், தவணுடன் சேர்ந்தார். ராகுல் நிதானமாக ஆட தவண் தொடர்ந்து அதிரடியில் இறங்கினார். 115 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்த நிலையில் தவண் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த கோலி, ராகுலுடன் சேர்ந்தார். இந்த ஜோடி நிலைக்கவில்லை. ராகுல்  26 ரன்களிலும், கோலி 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ரிஷப் பந்த் 36, ஜாதவ் 10, விஜய் சங்கர் 26 என குறைந்த பந்துகளில் அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழந்தனர். உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், இதுபோன்நேரங்களில் நிதானமாக விளையாடுவது விக்கெட்டுகளை தக்கவைக்க உதவும், அதிகமான ரன்களைச் சேர்க்கவும் உதவும்.

 43 ஓவர்களில் 300 ரன்களை எட்டிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் 350 ரன்களை எட்டியது. கடைசி 4 ஓவர்களில் 20 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பும்ரா ஒரு சிக்ஸர் அடித்து 6 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ரிச்சார்ட்ஸன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x