Published : 04 Mar 2019 12:28 PM
Last Updated : 04 Mar 2019 12:28 PM

இலக்கை விரட்டும்போது தோனியின் வெற்றி ரகசியம் என்ன? உஸ்மான் கவாஜா விளக்கம்

ஹைதராபாத் ஒருநாள் போட்டியுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்த எம்.எஸ்.தோனி இலக்குகளை விரட்டும்போது பதற்றமடையாமல் கடைசி வரை எடுத்துச் செல்வது எப்படி என்பதை ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா விளக்கியுள்ளார்.

 

அன்று ஹைதராபாத்தில் 99/4 என்ற நிலையிலிருந்து வேக ரன் குவிப்புக்கு சாதகமற்ற மந்தமான பிட்சில் தோனி உறுதுணையாக நிற்க கேதார் ஜாதவ் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 236 ரன்கள் இலக்கை கொஞ்சம் கடினமாக விரட்டினாலும் வெற்றியை உறுதி செய்தது தோனி-ஜாதவ் கூட்டணி.

 

இந்நிலையில் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு  இது குறித்து கூறியதாவது:

 

தோனி திட்டங்களை அருமையாகச் செயல்படுத்துவதே காரணம். கடந்த 3 போட்டிகளாக அவர் நிதானத்துடன் அமைதியாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை இட்டுச் சென்றார். தேவையென்றால் பவுண்டரி அடிக்கிறார்.

 

ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு அவர் தன் ஆட்டத்தையும் மாற்றி கொள்கிறார், சிங்கிள், சிங்கிள், பிறகு 2 என்று ஓடி ரன்களை எடுப்பவர் திடீரென ஓரிரண்டு பவுண்டரிகளையும் விளாசி தனக்கேயுரிய முறையில் அழுத்தத்தைக் குறைக்கிறார்.

 

எப்போதும் இந்த மாதிரி ஆடுவது கைகொடுக்காது, ஆனால் தோனிக்கு பெரும்பாலான தருணங்களில் கைகொடுக்கிறது. அவரால் இப்படி ஆட  முடிகிறது. அதுதான் அவரது அனுபவம்.

 

இவ்வாறு கூறினார் உஸ்மான் கவாஜா.

 

2019-ல் தோனி இதுவரை 301 ரன்களை 150.50 என்ற சராசரியில் எடுத்துள்ளார். நாக்பூரில் நாளை (5-3-19) 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x