

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது:
"ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அழைப்பை ஏற்கலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன். நமக்கு எங்கு அங்கீகாரம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்ய வேண்டியதுதானே. ஆனால் நான் நிறைய யோசித்தேன் கடைசியில் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்தேன்” என்றார்.
ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கசப்புணர்வு ஏன் என்று கேட்ட போது, “இப்போது நான் அதைக் கூறமாட்டேன், கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகும் போது சரியான தருணத்தில் அதனை வெளிப்படுத்துவேன்” என்றார்.
திசர பெரேராவுக்கும் அணித் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். கரிபியன் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட பெரேரா அனுமதி கேட்டார், ஆனால் ஜெயசூரியா இவரை இலங்கை ஏ அணிக்கு விளையாடுமாறு வலியுறுத்தினார். ஆனால் இவர் ஏ அணியில் விளையாட இயலாது என்று விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் இலங்கைக்கு ஆடப்போவதில்லை என்ற செய்திகள் அடிபட்டது. ஆனால் அதிபர் ராஜபக்சே தலையீட்டில் விஷயம் சுமுகமாக முடிந்ததாக அந்தப் பத்திரிக்கை செய்தி தெரிவித்துள்ளது.