Published : 07 Feb 2019 03:57 PM
Last Updated : 07 Feb 2019 03:57 PM

உள்நாட்டில் அஸ்வின் புலி; வெளிநாட்டில் குல்தீப்தான் புலி: ஹர்பஜன் சிங் சூசகம்

வெளிநாடுகளில் நம் அணியின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ்தான், அஸ்வின் காயமடைந்து விடுகிறார் என்று நேரடியாகவே தெரிவித்தார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.

 

ஏற்கெனவே கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து தொடரில் அஸ்வின் காயத்தினால் டெஸ்ட் போட்டியில் ஆட முடியாமல் போனதற்கு அவர் காயங்களை சரியாக நிர்வகிப்பதில்லை என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் ரவிசாஸ்திரி கருத்தான குல்தீப் யாதவ்தான் அயல்நாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் என்று கூறிய ரவிசாஸ்திரியின் கூற்றை ஆதரித்துப் பேசிய ஹர்பஜன் சிங், அஸ்வின் உள்நாடுகளில் விக்கெட்டுகள் ரெக்கார்ட் அபாரமாக உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் அவ்வாறு இல்லை என்றார்.

 

65 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள அஸ்வின் 122 இன்னிங்ஸ்களில் 342 விக்கெட்டுகளை 25.43 என்ற சராசரியில் வீழ்த்தியுள்ளார். 26 முறை 5 விக்கெட்டுகள், 7 முறை 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

 

38 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அஸ்வின், 27 வெளிநாட்டுப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், எண்ணிக்கை ரீதியாக டெஸ்ட்டுகு 4 விக்கெட்டுகள் என்பது அயல்நாட்டில் பரவாயில்லைதான், ஆனால் அயல்நாடு என்றால் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் எவ்வளவு விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பதே முக்கியம், ஆஸ்திரேலியாவில் 7 டெஸ்ட்களில் 27 விக்கெட்டுகள் ஒன்றும் மோசமில்லை. ஆனால் இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகள்,  தென் ஆப்பிரிக்காவில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள். நியூஸிலாந்தில் டெஸ்ட்டில் ஆடியதில்லை. அயல்நாடு என்றால் அப்போது ஓஞ்சுப்போன வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 டெஸ்ட்களில் 17 விக்கெட்டுகளையும் இலங்கையில் 6 மேட்சில் 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். ஒட்டுமொத்தமாக அவ்வளவு மோசமில்லை என்பதோடு, மேம்பாடு அடைவதற்கான வழியும், நம்பிக்கையும் உள்ளது. ஆனால் குல்தீப் யாதவ் சிட்னியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததையடுத்து அவரது உயர்வு இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது.

 

இந்நிலையில் ஹர்பஜன் சிங் இந்தியா டுடேயில் கூறியதாவது:

 

குல்தீப் யாதவ் அயல்நாடுகளில் நம்பர் 1 இந்திய ஸ்பின்னர் என்று ரவிசாஸ்திரி கூறியதை வைத்துப் பார்க்கும்போது அணி இப்போது அவரில் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒரு தெரிவாகப் பார்க்கின்றனர் என்பது புரிகிறது.  இங்கிலாந்தில் அஸ்வின் அபாரமாகத் தொடங்கினார், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் வீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் தொடர் போகப்போக தன் பாதையை இழந்தார், மொயின் அலி அஸ்வினை விஞ்சி விட்டார். அஸ்வின் இல்லாதது என்பது ஒரு கடினமான தேர்வுதான், ஆனால் அணியின் நலன் கருதி செய்யப்படுகிறது.

 

அஸ்வினின் உள்நாட்டு பந்து வீச்சு ரெக்கார்ட் நன்றாக உள்ளது, ஆனால் வெளிநாடுகளில் அப்படியல்ல. அதனால்தன குல்தீப் யாதவுக்கு அஸ்வினைக் காட்டிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குல்தீப்பும் கொடுத்த வாய்ப்புகள் அனைத்தையும் நன்றாகப் பற்றிக்கொண்டார். சிட்னியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதாரணமல்ல.  ஜடேஜாவும் இங்கிலாந்து ஓவல், மெல்போர்ன், சிட்னியில் நன்றாக ஆடினார்.  ஆகவே இவர்கள் இருவரும் இனி அணியை முன்னெடுத்துச் செல்வார்.

 

இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x